மதுரை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிக்காக பள்ளம் தோண்டும்போது, சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு கை இல்லாத நிலையில் கிடைக்க, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஊடகங்களின் கவனம் முழுவதும் இந்த சம்பவத்தின் மீது திரும்ப, அதன் பின்னணியை விசாரிக்கும் பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசாவுக்கு வழங்கப்படுகிறது.
எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில் விசாரணையை தொடங்கும் மூசா ராசா, அதே பகுதியில் மேலும் ஒரு எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணையில், இரண்டு எலும்புக்கூடுகளும் பெண்களுடையது என்பதும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரிய வருகிறது.
இதோடு வழக்கு முடிந்துவிட்டதாக காவல்துறை நினைக்கும் நிலையில், இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய மூசா ராசா தொடர்ந்து விசாரணையில் இறங்குகிறார். ஒவ்வொரு தடயமும் புதிய கேள்விகளை எழுப்ப, பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைக்குள் பயணிக்கும் விசாரணை இறுதியில் எதிர்பாராத மர்மங்களை வெளிக்கொண்டு வருகிறது.
கிரைம் திரில்லர் கதைகளுக்கே உரிய பல அடுக்குகளுடன் திரைக்கதை பயணித்தாலும், ஆரம்பத்திலேயே கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத வகையில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார். குறிப்பாக, முதல் அத்தியாயத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் விதத்தில் எலும்புக்கூடு தொடர்பான விசாரணை அமைந்திருப்பது தொடருக்கு வலு சேர்க்கிறது.
ஒரு கட்டத்தில் அந்த விசாரணைக்கு விடை கிடைத்துவிட்டதாக நினைக்கும் நேரத்தில், கதை மற்றொரு திசையில் பயணிக்கிறது. கொலைக்கான காரணம் என்ன, இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்ற கேள்விகளை மையமாக வைத்து அடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது.
கிரைம் மற்றும் மர்மத்தை மட்டுமே நம்பாமல், காதல், கணவன்–மனைவி உறவு, மதுரை இளைஞர்களின் ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் என பல்வேறு அம்சங்களையும் கதையோடு இணைத்திருப்பது கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக, சமகாலத்தில் உலகளவில் பேசப்படும் ஒரு முக்கியமான விஷயத்தையும் கதையின் போக்கில் இயக்குநர் கையாண்டிருப்பது தொடரின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.
சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், காவல்துறை அதிகாரியாக முதல் முறையாக நடித்தாலும், கதாபாத்திரத்திற்கு அதிகப்படியான அலங்காரம் கொடுக்காமல் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கமான ஆக்ஷன் ஹீரோ பாணியை தவிர்த்து, விசாரணையின் போது அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படும் அதிகாரியாக அவர் இருப்பது கதைக்கு பொருத்தமாக இருக்கிறது.
மதுரை மாவட்ட எஸ்.பி. கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகா, காவல்துறை அதிகாரிக்கான கம்பீரத்தையும் கட்டுப்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சீருடை தோற்றத்திலும் நடிப்பிலும் கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தத்தை கொடுத்திருக்கிறார்.
முடக்கத்தான் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை இளைஞனின் இயல்பை தனது நடிப்பில் நன்றாக வெளிப்படுத்துகிறார். ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம், நண்பர்களுடனான காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.
‘டாடா’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான அபர்ணா தாஸ், இந்த தொடரில் சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கிறார். இருப்பினும், அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
மொத்தத்தில், ஆரம்பத்தில் ஒரு எலும்புக்கூட்டைச் சுற்றி தொடங்கும் விசாரணை, பின்னர் இரண்டு கொலைகளின் பின்னணி, அதற்கான காரணம் மற்றும் எதிர்பாராத மனிதர்களின் தொடர்புகள் என பல அடுக்குகளாக விரிவடைவது ‘வதந்தி – சீசன் 2’ தொடரை விறுவிறுப்பான கிரைம் திரில்லராக மாற்றுகிறது.
கொலையாளி யார் என்ற கேள்விக்கு பார்வையாளர்கள் வைக்கும் ஒவ்வொரு யூகத்தையும் மாற்றி மாற்றி செல்லும் திரைக்கதை, இறுதி வரை மர்மத்தை தக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. மர்மம், விசாரணை மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவற்றை இணைத்து வழங்கியிருப்பதால் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்த தொடர் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமைகிறது.


