புகைப்படக் கலைஞரான வீரா, இதுவரை யாருடைய கண்களிலும் சிக்காத அரிய வகை மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் எதிர்பாராத விதமாக வழிதவறி, மனிதர்கள் செல்வதற்கே அஞ்சும் ஆபத்தான வனப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அவர், இயற்கையின் ஆபத்துகளையும், புரியாத மர்மங்களையும் எதிர்கொண்டு உயிர் பிழைக்க போராடுவதுதான் ‘போட்டோகிராபர்’ படத்தின் மையக்கதை.
வனப்பகுதிக்குள் வீரா எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவமும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. உண்மையில் நடப்பது என்ன? வீரா மனதில் உருவாகும் காட்சிகள் எவை? காட்டில் இருக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? என்ற கேள்விகளுடன் கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில் இது வெறும் காட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் மனிதனின் கதை அல்ல, அவனது மனநிலையோடு பயணிக்கும் உளவியல் கதையாகவும் மாறுகிறது.
படத்தின் கதையை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரஃப், தனக்கான கதாபாத்திரத்தை முழுமையாக தாங்கியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு கதையின் பதற்றத்தோடு நன்றாக ஒன்றுகிறது. பயம், குழப்பம், பதற்றம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். அதே நேரத்தில், முதல் பாதியில் சில இடங்களில் அவரது நடிப்பு சற்று மிகையாக தோன்றுவது குறையாக இருக்கிறது.
அனனி சுவாமிநாதன் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவருக்கான காட்சிகள் குறைவாகவே உள்ளன. கிடைத்த வாய்ப்பில் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
கருணாகரன் வழக்கமான இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு கலகலப்பையும் பலத்தையும் சேர்க்கிறார். உறியடி சிவாவும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்துள்ளார். அஷ்ரஃபின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன் அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள தேவி மகேஷின் நடிப்பும் அளவாகவும் இயல்பாகவும் இருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று ஒளிப்பதிவு. அயீஸ் அஹ்மத்தின் கேமரா மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை மட்டுமின்றி, அதன் ஆபத்தான தன்மையையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக வனப்பகுதியில் வரும் காட்சிகள் கதையின் மனநிலைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை, படத்தின் மர்மம் மற்றும் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. சில காட்சிகளில் இசை, திரையில் நடப்பதைவிட அதிகமாகவே பார்வையாளர்களை அந்த சூழலுக்குள் அழைத்துச் செல்கிறது.
இயக்குநராக அஷ்ரஃப் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரே கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இயற்கை, மர்மம், அமானுஷ்யம் மற்றும் உளவியல் என பல அடுக்குகளில் கதையை நகர்த்த முயன்றிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், படத்தின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்திருக்கும்.
குறிப்பாக முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை, சில இடங்களில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் மர்மம் மற்றும் உளவியல் அம்சங்கள் சற்று அழுத்தமாக கையாளப்பட்டிருப்பதால் படம் அங்கிருந்து வேகம் பெறுகிறது.
மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு தனிமனிதனின் வனப் பயணத்தை மர்மம் மற்றும் உளவியல் கலந்து சொல்ல முயன்றிருக்கும் திரைப்படம் ‘போட்டோகிராபர்’. வலுவான திரைக்கதை மற்றும் இன்னும் அதிகமான திகில் காட்சிகள் இருந்திருந்தால், இந்தப் பயணம் பார்வையாளர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும்.
‘போட்டோகிராபர்’ – முயற்சி பாராட்டுக்குரியது; ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றம் தேவை.


