பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’க்ஷ

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரித்துள்ள இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிமோன் கே. கிங் இசையமைத்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, “வதந்தி சீசன் 2-வுக்கான கதைக்கருவை சீசன் 1 உருவாக்கப்பட்ட காலத்திலேயே இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் வைத்திருந்தார். மதுரையை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதைக்காக அவர் பல மாதங்கள் அங்கு தங்கி, மக்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து திரைக்கதையை உருவாக்கினார். சசிகுமார் இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியுள்ளது,” என்றனர்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், “வதந்தி சீசன் 1 வெற்றிக்குப் பிறகு சீசன் 2 மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே எனக்கான மிகப்பெரிய சவால். இந்தத் தொடருக்காக 43 நாட்கள் மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது. அனைவரின் கடின உழைப்பும் இந்தத் தொடரின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது,” என்றார்.

மேலும், சசிகுமாரை சந்தித்து கதையை கூறியபோதே அவர் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும், அதன்பிறகு அவரை மனதில் வைத்து ‘மூஸா ராசா’ கதாபாத்திரத்தை மேலும் சிறப்பாக உருவாக்கியதாகவும் இயக்குநர் தெரிவித்தார். சீசன் 1-ல் எஸ்.ஜே. சூர்யாவின் பங்களிப்பு மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், “மதுரை பின்னணியில் கதை என்பதால் முதலில் நான் ‘மணி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் இயக்குநர் என்னை போலீஸ் அதிகாரியான ‘மூஸா ராசா’ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதையாக இது உருவாகியுள்ளது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இயக்குநர் சொன்னதை மட்டுமே கேட்டு இயல்பாக நடித்தேன்,” என்றார்.

விவேக் பிரசன்னா, யஷ்வந்த், அபர்ணா தாஸ், அனகா மருதோரா உள்ளிட்ட படக்குழுவினரும் தங்களது படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அபர்ணா தாஸ், சசிகுமாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு இந்தத் தொடரின் மூலம் நிறைவேறியதாக தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில், சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டும் வெவ்வேறு கதைக்களம் மற்றும் பின்னணியைக் கொண்டிருப்பதால், இரண்டிற்கும் முற்றிலும் மாறுபட்ட இசையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். சீசன் 2வில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தத் தொடர், ஆங்கிலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டில்களுடன் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.