சுங்கத்துறையின் மறைக்கப்பட்ட உலகம்… அதிரடி திரில்லராக வரும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படம், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் அதிரடி கிரைம் திரில்லராக தயாராகி வருகிறது.

இந்தப் படத்தை இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரி தோ. சமய முரளி இயக்குவதுடன், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பின்னணி இசையையும் அவரே கவனித்துள்ளார். சுங்கத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற அவர், தனது பணிக்காலத்தில் விசாரித்த பல வழக்குகளின் அனுபவங்களை கற்பனையுடன் இணைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்.

கதையில், சென்னையைச் சேர்ந்த அமர் மற்றும் தீனா என்ற இரண்டு இளைஞர்கள், வறுமையிலிருந்து மீளும் ஆசையில் கடத்தல் கும்பலின் வலையில் சிக்குகின்றனர். துபாயிலிருந்து நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா களமிறங்க, அதன்பின் நடக்கும் அதிரடி சம்பவங்களே படத்தின் மையக்கதையாக அமைகிறது.

எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரிக்கும் இப்படம், அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் கலந்த திரைக்கதையுடன், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சுங்கத்துறையின் முக்கிய பங்கையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாகி வருகிறது.