ஷிவானி செந்திலின் புதிய பொழுதுபோக்கு படம் தீவிரமாக உருவாகிறது

‘கார்கில்’ மற்றும் ‘டேக் டைவர்ஷன்’ படங்களின் இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் மூலம் 15 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களின் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களும், அதிலிருந்து அவர்கள் மீண்டு வரும் விதமும் கதைக்களமாக அமைந்துள்ளது. நகைச்சுவை, காதல், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இணைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை கோலஞ்சி குமார் கவனிக்க, இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைக்கிறார்.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இந்தப் படத்தை உருவாக்கி வரும் ஷிவானி செந்தில், படத்தின் தலைப்பு, கதாநாயகன், கதாநாயகி மற்றும் முழுமையான தொழில்நுட்பக் குழு விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.