புதிய பாடத் திட்டத்தை உருவாக்குவது தொடர்பான கருத்தரங்கத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

 

புதியபாடத் திட்டம் தொடர்பான கருத்தரங்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்துகொண்டு புதிய பாடத் திட்டம் குறித்த தங்கள் கருத்துக்களைத் முன்வைக்கின்றனர். இந்தக் கருத்தரங்கை இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இந்தியாவுக்கான ஜெர்மன் துணைத் தூதர் அஹம் ஃபாஃபிக் உள்ளிட்டோர் கருத்தரங்களில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசின் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 54 ஆயிரம் கேள்விகள், அதற்கான பதில்கள், வரைபடங்களின் தொகுப்பு 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பாடத்தில் இருந்து மட்டும் கேள்வி கேட்கப்படும் முறையால் சிறந்த மாணவர்கள் உருவாவது தடைபடுவதாகவும், தேர்வு முறையில் மாற்றம் அவசியம் என்றும் கூறினார்.