ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’.

இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார்.

வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் இப்படத்தினை படமாக்கி உள்ளனர்.

இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும்.

ஆனால் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின் பார்வையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது..

படத்தைப் பற்றி மேலும் இயக்குநர் எஸ்.மணிபாரதி கூறுகையில்,

“இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள்.

இப்படத்தினைப் பார்த்தவுடன் வெளியிட முன்வந்த ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் கே..கந்தசாமி மற்றும் கே.கணேசன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

புத்தாண்டின் தொடக்கத்திலேயே வர உள்ளதால் அனைவருக்கும் இப்படம் புத்தாண்டு கொண்டாட்டமாகவும் இருக்கும். ஊட்டியின் கடுங்குளிரில் நள்ளிரவில் படமாக்கப்ப்பட்ட காதல் காட்சிகள் அனைத்தும் இப்படத்தின் உன்னதங்கள்” என்கிறார்.

இதன் தொழில்நுட்பக் கலைஞர்களாக கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுத, ஜே.பி எடிட்டிங் செய்ய, பழனிவேல் கலை இயக்கம் செய்ய, இவர்களோடு ஏ.வி பழனிசாமி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி உள்ளார்..