அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – சினிமா விமர்சனம்

 துபாயில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கஸ்தூரி, துபாயில் பெரிய டானாக இருப்பவரை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பெரிய டானுக்கு நெருக்கமானவர்களை சுற்றி வளைக்கிறது போலீஸ். அப்போது மஹத்தையும் கைது செய்து விசாரிக்கிறது. அப்போது அவர் ‘அஸ்வின் தாத்தா’ பற்றிய கதையை கூற ஆரம்பிக்கிறார். அதன்பின்னர் 90 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும்  மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார்.

இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு. இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான். சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள்.

அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார். பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்.

அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார். அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்