ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தார். துணை ஜனாதிபதி பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்டுவருகிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கிடமும் ஆதரவு கோரினார்.
பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார். பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக 22ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளன.