இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத பாடல்கள் வந்திருக்கிறது. இந்த ஹிட் காம்பினேஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘நேசிப்பயா’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் பணிபுரிந்தது பற்றிய மகிழ்வான அனுபவத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து கொள்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, “எனது நண்பர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இணைந்து பணிபுரிந்த படங்களை கொண்டாட ரசிகர்கள் ஒருபோதும் தவறியதில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கியபோது, இசை ஆர்வலர்கள் கொண்டாடும்படியான இசையைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி” என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது. விஷ்ணுவர்தன் மற்றும் அவரது தொழில்நுட்ப குழுவினர் விஷூவலாக படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். படத்தின் ’ரா ஃபுட்டேஜை’ பார்த்தபோது எனக்கு அது புரிந்தது. அவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற சிறந்த இசை கொடுக்க வேண்டிய முழு பொறுப்பும் என் மீது இருப்பதாக உணர்ந்தேன். ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்க்க ஆவலாக உள்ளேன்”.
ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க நடிகர்கள் சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், சிவ பண்டிட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.
*தொழில்நுட்ப குழு:*
இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்