தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மே 31ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜா கட்டர் என்ற ராட்சத இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று கட்டட இடிப்பு பணியின்போது ஜா கட்டர் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.
அதனை சரி செய்வதற்காக சென்ற ஊழியர்கள் மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்துள்ளது. இதில், ஜா கட்டர் இயந்திர டிரைவரின் உதவியாளர் சரத் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து கட்டட இடிப்பு பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையாளர் சரவணன் வந்து ஆய்வு செய்தார்.