மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர்.’ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நன்னா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பான் இந்திய அளவிலான இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். தனித்துவமான இசை மற்றும் உணர்வுபூர்வமான பின்னணி இசை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஹேஷாம். இவர் இசையில் உருவான பாடல்கள் இணையத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனால் இந்தப் படத்தின் பாடல்களுக்கும், ஆல்பத்திற்கும் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
தன்னுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் – இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்- அதிதி ஷங்கர்- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்கு திரையுலக பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.