“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ” – நடிகர் சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி நடிகர் சரத்குமார் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார், “விஜய் மில்டனின் முந்தைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெவ்வேறு ஜானர்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம். இருப்பினும், அவர் என்னிடம் கதை சொன்னபோது இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானது என்பதை உணர முடிந்தது. எனது பகுதிகளுக்கு டப்பிங் செய்யும்போது, எனக்கு கதை சொல்லப்பட்டதைவிட திரைக்கதையில் இன்னும் வலுவாக இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

விஜய் மில்டனுடன் பணிபுரிந்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். தனக்கு என்ன வேண்டும் என்ற துல்லியமான திட்டமிடலும் செயல் வடிவமும் இருந்ததால் முழு படப்பிடிப்பும் இலகுவாக சென்றது. எதிர்காலத்தில் விஜய் மில்டனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். சவாலான காட்சிகளைத் தன் நடிப்பால் மெருகேற்றும் ஒரு அற்புதமான மற்றும் திறமையான நடிகர் விஜய் ஆண்டனி” என்றார்.
 
விஜய் ஆண்டனி, சரத்குமார் ஆகியோரைத் தவிர, சத்யராஜ், மேகா ஆகாஷ், தாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.