ட்விட்டர் உரிமையாளர் எலான் மாஸ்கிடம் பாராட்டு பெற்ற துரை சுதாகர் தோன்றும் காட்சி

துரை சுதாகரும் நடிகை டோனா ரொசாரியோவும் இணைந்து ‘தப்பாட்டம் ‘ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள். ஓர் இளநீரில் கதாநாயகி டோனா ஸ்ட்ரா போட்டுக் குடிப்பார். கதாநாயகி வாயிலிருந்து துரை சுதாகர் உறிஞ்சிக் குடிப்பார். இப்படி ஒரு காட்சி ‘தப்பாட்டம்’ படத்தில் இடம்பெற்றது. அந்தப்படத்தின் விளம்பரத்தில் அந்தக் காட்சியின் படம் இடம் பெற்றிருக்கும்.

இணையத்தில் புழங்கும் இந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தை ட்விட்டர் தளத்தின் (இப்போது எக்ஸ் தளம்) உரிமையாளர் எலான் மாஸ்க் பார்த்துப் பாராட்டி ஹவ் இன்டெலிஜென்ஸ் ஒர்க்ஸ் அதாவது எப்படி எல்லாம் புத்திசாலித்தனமாகச் சிந்திக்கிறார்கள் என்கிற தொனியில் அந்த ஐடியாவைப் பாராட்டித் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப் பிறகு அது தீயாகப் பற்றிக் கொண்டு விட்டது. பிறகென்ன? துரை சுதாகருக்கு பல முனைகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.ஏராளமானவர்கள் இதனைக் குறிப்பிட்டு வாழ்த்திப் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர். இது பற்றி அவர் பேசும்போது,

“காலையில் இருந்தே போன்கால்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம். குறிப்பாக, தப்பாட்டம் என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம்.
தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் தேடிக் கொடுத்தது. அதன் விளைவாகத்தான் களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்று எலான் மாஸ்க் அந்தப் படத்தின் ஸ்டில்லைப் பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இந்தப் படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்தப் பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும்.
எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டு இருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன்.நன்றி”

என்று நடிகர் துரை சுதாகர் ஊடகங்களுக்குத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.