பால் கலப்பட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது, தனியார் பாலில் கலப்படம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை கண்காணிக்க வேண்டும் என்று கடந்த 5 வருடமாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். தனியார் பாலை ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகிறார். எந்த அடிப்படையில் அவர் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று ரகசியமாக ஆய்வு நடத்தி இருக்க வேண்டும். பாலை பாக்கெட்டில் அடைப்பதற்கு முன்பே சோதனை செய்ய வேண்டும். அப்போது தான் கலப்படம் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். பாலில் கலப்படம் என்று வெளிப்படையாக கூறினால் தனியார் பால் நிறுவனத்தினர் உஷாராகி விடுவார்கள்.
இனிமேல் சோதனை செய்தாலும் கலப்படத்தை கண்டுபிடிக்க முடியாது. எனவே ரகசிய ஆய்வு நடத்தி முடிவு தெரிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இப்படி வெளிப்படையாக அறிவிப்பதில் உள்நோக்கம் உள்ளது. பால் என்பது குழந்தைகள் மற்றும் பொது மக்களின் தினசரி உணவு சார்ந்த விஷயம். இதில் அரசு முறையாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். திடீரென்று கலப்படம் செய்கிறார்கள் என்று அமைச்சர் சொல்வதை ஏற்க முடியாது. இது பொது மக்களை பீதி அடைய செய்யும் செயல். கலப்படம் செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அதை மூடி இருக்க வேண்டும். உணவுப் பொருளில் கலப்படம் செய்தால் ரூ.1,500 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படுகிறது.
இது மிக குறைவான தண்டனை ஆகும். அபராதத்தை கட்டி வெளியே வந்து விடுவார்கள். உணவுப் பொருள் கலப்பட விவகாரத்தில் மாநில அரசு சட்டதிருத்தம் கொண்டு வந்து கலப்படம் செய்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் சட்ட திருத்தம் செய்யப்படவில்லை. எனவே அரசு உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வந்து உணவுப் பொருளில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.