தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய முரட்டுப் பக்தன்” என்று தலைவர் கருணாநிதியால் பாசத்துடன் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் பெரியசாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கழகத்தின் போர்க்குணமிக்க மாவட்டக் கழக செயலாளராக திகழ்ந்த அவரது மறைவிற்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், என் சார்பிலும், தி.மு.க.வின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கருணாநிதி மீது தன் உயிரையும், என் மீது தனிப்பட்ட பாசத்தையும் வைத்திருந்தவர் அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி என்பதை நினைக்கும் போது, பெருமைமிக்க தொண்டரை இழந்த சோகம் எங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.
நலமுடன் திரும்பி வருவார் என்று நம்பிக் கொண்டிருந்த எங்களுக்கு அவரது மறைவு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது. 1960ஆம் வருடத்தில் இந்த பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி வட்டக் கழகச் செயலாளர் முதல் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வரை கழகத்தினரின் செல்வாக்கைப் பெற்றும், தூத்துக்குடி நகர்மன்றத் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை மக்கள் செல்வாக்கை பெற்றும், மதுராகோட்ஸ் பஞ்சாலை தொழிலாளர், ஸ்பின்னிங் மில் தொழிலாளர், உப்பு மற்றும் தலைசுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 36 தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து “தொழிலாளர் வர்க்கத்தின்” உரிமைகளுக்காகவும் வாதிட்ட பெருமைக்குரியவர். 30 வருடங்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக விளங்கிய அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி கழகத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அவருக்கு “கலைஞர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டார். அவர் பிரிந்தாலும் அவரிடம் உள்ள “கழக உணர்வு” எப்போதும் தலைமுறை தலைமுறையாக நம்மிடையே தங்கி நிற்கும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.