விளையாட்டு வீராங்கனைகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதிஉதவி வழங்கினார்

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் ஊக்குவிக்கும் வகையில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாயும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 1 கோடி ரூபாயும்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் உயர்த்தி வழங்கியதோடு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் உயர்த்தி வழங்கினார்கள்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திடும் விதமாக, 2015ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 66 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக, 2 கோடியே 83 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் அவர்களது 29 பயிற்றுநர்களுக்கு 27 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்; 2016ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபாடி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் டி. சேரலாதன் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, 2016ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற 5-வது பீச் ஆசியன் கபாடி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற செல்வி எஸ். அந்தோணியம்மாள் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று வழங்கினார்கள்.

2016ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம்  வென்ற சிவ மகாதேவன் 
அவர்களுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, 2016ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற 
4-வது ஆசிய இளையோர் கபாடி வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 
செல்வி ஐ. பவித்ரா மற்றும் செல்வி என். நதியா ஆகியோருக்கு தலா 3 இலட்சம் வீதம், 
மொத்தம் 6 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற 
பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற திரு. டி. மாரியப்பன் 
அவர்களின் பயிற்றுநரான டி. சத்தியநாராயணா அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாய்க்கான 
காசோலை, 2015ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் சதுரங்க மாஸ்டர் பட்டம்  வென்ற 
செல்வி ஜி.கே. மோனிஷா அவர்களுக்கு 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை; 
2010ஆம் ஆண்டு வங்கதேசத் தலைநகரம் டாக்காவில் நடைபெற்ற 11-வது தெற்காசிய 
விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு 
வீரர்களின் பயிற்றுநர்கள் 12 பேர்களுக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள்; 
என மொத்தம் 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய 
42 பயிற்றுநர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான 
காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று வழங்கினார்கள்.
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து பரிசுத் தொகைக்கான காசோலைகளை 
பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்றுநர்கள் 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் 
தெரிவித்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.