பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணினி அறிவியல் பாடம் பிரிக்க முடியாத அங்கமாக இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் கணினி அறிவியல் பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். கல்வியின் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் ஒருங்கிணைந்த ஒன்றாக மாறிவிட்ட நிலையில், கணினி அறிவியல் பாடத்தை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்காதது கண்டிக்கத்தக்கதாகும். 1980ஆம் ஆண்டுகளில் கணினி அறிமுகம் செய்யப்பட்ட போது அது பெரும்பான்மையான மனிதர்களுக்கு தொடர்பில்லாத கருவியாக இருந்தது. ஆனால், இப்போது கல்வியைத் தாண்டி கணினி என்பது மனித வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது.
படிக்காதவர்கள் கூட தாங்கள் நடத்தும் சாதாரண தேனீர் கடைகள், சிற்றுண்டிக் கடைகள் ஆகியவற்றில் கூட கணினிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கணினி என்பது அறிவு சார்ந்த ஒன்று என்பதையெல்லாம் கடந்து தேவை சார்ந்த ஒன்றாக மாறி விட்டது.இதை உணர்ந்ததால் தான் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணிப்பொறியியல் பாடத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதன்படியே அதற்கான பாடநூல்களும் அச்சிடப்பட்டன. ஆனால், பாடநூல்கள் மட்டும் தான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதே தவிர, கணிப்பொறியியல் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் ஈட்ட பயன்படும் துறையாக இருந்ததே தவிர, வளர்ச்சிக்கு வழி வகுக்கும் துறையாக இல்லை என்பது தான். தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் அனைத்திலும் கணினிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கணினிக் கல்வி கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தில் வெற்றி பெற்றால் தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலும் தமிழகத்தைச் சார்ந்து செயல்பட்டு வரும் புதுச்சேரியில் கூட 132 அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கற்றுத்தரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கூட அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதலே கணினிப் பாடம் கற்றுத்தரப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலா பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. கணினி அறிவியல் என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதால் தான் இந்தியாவில் மத்தியப் பாடத்திட்டம் முதல் அனைத்து மாநிலப் பாடத்திட்டங்களிலும் கணினி அறிவியலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பள்ளிக்கல்வித்துறை முடங்கிக் கிடந்ததால் தான் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கணினி அறிவியல் படித்த ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததால் எப்படியும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகி விடலாம் என்ற நம்பிக்கையில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற மாணவர்கள் பலர் கூடுதலாக கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தனர். 2015-ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 39,019 பேர் கணினி ஆசிரியர்களாக நியமிக்க தகுதி பெற்று பதிவு செய்து வைத்துள்ளனர்.
ஆனால், கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படாததால் அவர்கள் இன்று வரை வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கணினி படித்த ஆசிரியர்கள், கணினி படிக்க விரும்பும் மாணவர்கள் என இரு தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலையும் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி மருத்துவம், பொறியியல், கலை – அறிவியல் உள்ளிட்ட எந்தப் பட்டப்படிப்பாக இருந்தாலும் அதில் 3 முதல் 6 மாதங்களுக்கான கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்துடன் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 17,000 பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிலைப்பு செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.