சர்வதேச அளவிலான மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் சென்னையில் நாளை துவக்கம்

14 நாடுகள் பங்கேற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான 2வது மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதன் முதலாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நடைபெற்றது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது

வெடரன் கிரிக்கெட் இந்தியா (வி.சி.ஐ) அமைப்பு சார்பில் 2வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 18ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

இங்கிலாந்து, கனடா, தென்கொரியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஜிம்பாவே, இதர உலக அணி, வேல்ஸ், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

45 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும் இந்த போட்டிகள் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது.

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர்களும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஸ்கோரர்களும் இந்த போட்டிகளுக்கு பணியாற்றுகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா நாளை (18ஆம் தேதி) மாலை 5 மணி அளவில் விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட் வளாகத்தில் நடைபெறுகிறது.

புகழ்பெற்ற முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ் பெற்ற சென்னை மாநகரில் இந்த போட்டியை மிகச் சிறப்பான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது என சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட்(ஐ.எம்.சி) அமைப்பின் பிரதிநிதி கிரேக் மெக்டொனால்ட், ஐ எம் சி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான கமிட்டி சேர்மன் விரேந்தர் பூம்லா ஆகியோர் கூறினர். பேட்டியின் போது போட்டி குழு தலைவர் ரவிராமன், போட்டி இயக்குனர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.