ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரும், அவரது கார் டிரைவரும் அரசியலுக்கு வரும்போது ரஜினி வந்தால் என்ன தவறு என நக்கலடித்தபடி நடிகரும், அரசியல் பேச்சாளருமான ராதாரவி, செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து ராதாரவி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, இன்று அரசியல் ஆசை எல்லோருக்கும் வந்துவிட்டது. அது ரஜினிக்கும் இருக்கிறது. அதை நாம் தடுக்க கூடாது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தார். அவரது காணவரும் அரசியலுக்கு வந்துள்ளார். தீபாவின் கார் டிரைவரும் அரசியலுக்கு வந்துள்ளார். இவர்கள் எல்லாம் வரும்போது ரஜினி அரசியலுக்கு வந்தால், என்ன தவறு.
ரஜினி, எதை செய்தாலும், கடவுள் காட்டும் வழி என்றே சொல்கிறார்.
அதனால், அவர் ஆரம்பித்தால், தவறில்லை. அவர் தமிழக மக்களிடம் பணமும், புகழும் அதிகமாகவே சம்பாதித்துள்ளார். அதை அவர்களுக்கு செலவு செய்ய அரசியலுக்கு வருவது தவறே இல்லை. பல ஆண்டுகளாகவே அவர், அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்போதாவது, அவர் அரசியலுக்கு வரட்டும். ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. வரவேற்கிறோம். தனது ரசிகர்களிடம் பேசிய ரஜினி, ஊழலில் ஈடுபடாத ஆட்களை தன்னுடன் வைத்து கொள்வதாக கூறியிருக்கிறார். அவர் எப்படி, யாரை தேடி பிடிக்கிறார் என்பதை எல்லோருமே சேர்ந்து பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.