காலை முதலே கடுமையான வெப்பம் நிலவிவந்த நிலையில் காலை 11.50 மணியளவில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தொட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “சென்னையில் இன்று காலை 11.50 மணியளவில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து பதிவான வெப்ப அளவில் இதுவே மிக அதிகம். கடைசியாக கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் 45 டிகிரி வெயில் அடித்தது மிக அதிகமான வெப்பநிலையாகும்.
அதன்பிறகு சென்னையில் கடந்த 2014இல் 42.8 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. 2015இல் 42.2 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. அதன்பிறகு இன்று (மே 18- 2017) காலை 11.50 மணி நிலவரப்படி 42 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இன்று அனல் காற்று அதிகமாகவே வீசும். அதனால், குழந்தைகள், வயதானோர் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களையும்கூட மாற்றி திட்டமிடவும்” என்றார். முன்னதாக கடந்த 16ஆம் தேதி, தமிழக வரலாற்றில் முதல்முறை யாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் பதிவானது.
பொதுவாக காலை நேரங்களில் கடலில் இருந்து குளிர்ந்த காற்று நிலப்பகுதியை நோக்கி வீசும். அந்த காற்று சரியான நேரத்தில் வீசினால் வெப்பம் சற்று குறைந்து காணப்படும். தாமதமாக கடல்காற்று வீசினால் வெப்பம் அதிகரிக்கும். கடற்காற்று வர தாமதமாவதால் வெப்பம் அதிகரித்து வருகிறது.