25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கிய நடிகர் கார்த்தி

இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார்.

தன்னலம் பாராமல் சமூக நலன் காக்கும் மக்களை கெளரவிக்கும் விழா
 

கார்த்தி25 – நடிகர் கார்த்தி பேசியது

இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்த நடிகர் கார்த்தி, அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் வழங்கினார்.

 “இங்கு அன்பு சார்ந்த இத்தனை பேரை ஒருங்கிணைத்ததே மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. 25வது படத்தை முடித்து விட்டோம். இந்த தருணத்தில் மக்களுக்கு நன்றி சொல்ல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாய் அளவில் அன்னதானம் வழங்க முடிவு செய்தோம். நான் பணமாக தான் கொடுத்தேன். ஆனால் என்னுடைய தம்பிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று தினமும் ஆயிரம் பேருக்கு அவர்கள் கையால் சாப்பாடு போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு விஷயம் செய்தாலும் அதில் பல பேருக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதால் தான் 25 பள்ளிகளை தேர்வு செய்து அவற்றுக்கு உதவி செய்ய முடிவு செய்தோம். அதேபோல ஆதரவற்ற 25 முதியோர் இல்லங்களை தேர்வு செய்தோம். தம்பிகள் கொடுத்த யோசனைப்படி தன்னார்வலர்களை அழைத்து கௌரவிக்க முடிவு செய்தோம். இங்கு எத்தனையோ தன்னார்வலர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை இப்படி ஒரு விழாவிற்கு அழைத்தால் வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது. அவர்களுக்கு நாம் என்ன தொகை கொடுத்தாலும் அது உடனே மக்களுக்கு தான் போய் சேரும். அப்படிப்பட்ட தன்னார்வலர்கள் ஒரு 25 பேரை மட்டும் இப்போது அழைத்து கௌரவப்படுத்தியுள்ளோம். எங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்து இந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டு எங்களை கௌரவித்த அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

சின்ன குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தரலாம் என்று கேட்டால் என்ன படிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம் என்பதை தாண்டி அன்பாக இருங்கள் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். தங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்கத் தெரியாதவர்களை கூட தேடிச் சென்று சந்தித்து உதவி செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கே வந்திருப்பவர்கள் யாருமே பெரிய வசதி வாய்ப்பு கொண்டவர்கள் இல்லை. ஆனால் தன்னால் முடிந்தவற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது பெரிய விஷயம். தங்களுக்கு இது தேவை என்று நினைக்காமல் சுற்றியுள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்களை இங்கே அழைத்து மீடியா முன்பாக அவர்களை அடையாளப்படுத்தியதில் மகிழ்ச்சி.

ஏனென்றால் இங்கே உதவி பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள். ஆனால் யார் மூலமாக உதவி செய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பலரிடம் பணம் இருக்கிறது நேரம் இல்லை. அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று சொல்லலாம். இதன் மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வரும். இந்த பணி இன்னும் தொடரும்”என்று கூறினார்.

 
கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடந்தேறிய கார்த்தி 25 விழாவில் திரைக்கலைஞர் கார்த்தி சிவகுமார் இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை  பெரும் 25 சமூக செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம் மற்றும் செயல்பாடுகள்
 
1. அமுதவள்ளி- பழங்குடிகள் செயல்பாட்டாளர்• ஆனைமலை வட்டம் இரவாளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் 38 வயதான அமுதவள்ளி.
 
• 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
 
• இறவாளர் பழங்குடி சமூகம் அமராவதி அணையை ஒட்டி அடர்ந்த காட்டில் வாழும் சமூகம்.

• எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தின்  பிண்ணனியிலிருந்து வந்தவர் இவர்.ஏழை பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை உண்டு பண்ண தொடர்ந்து போராடுபவர்.
 
• தோட்டங்களில் அடிமை வேலை பார்த்தவர்களை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி பதிவு செய்து வேலை வாய்ப்பை உறுதி செய்து அடிமை முறையை போக்கியவர்.
 
• 70 பட்டியல் பழங்குடி சமூகப் பெண்களுக்கு நில உரிமை பட்டா வாங்கி கொடுத்ததோடு அதில் இவரின் தொடர் முயற்சியில் 18 வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டள்ளது.

• 48 பெண்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகளை பெற்றுத்தந்துள்ளார். இதன் மூலம் கணவரை இழந்த 5 பெண்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் உதவியை பெற்று தந்துள்ளார்.
 
• இனச் சான்றிதழ், குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை பெற்று தருவது, கொரானா பேரிடர் காலங்களில் உதவி என தங்கள் பழங்குடி மக்களுக்காக அயராது உழைத்து வருகிறார் அமுதவள்ளி..
 
• தனது இல்லத்தில் இலவச மாலை நேர வகுப்பு நடத்துகிறார்.
 
• 10 பழங்குடி கிராம குழந்தைகள் பள்ளிக்கூடம் சேர்ந்து படிப்பதற்கும், மருத்துவ உதவி செய்வதற்கும் உதவி செய்து வருகிறார்..
 
• இப்பணிகளுக்காக யாரிடமும் உதவியோ பணமோ பெற்றதில்லை என்பது இவர்மீதான மதிப்பை அதிகரிக்கிறது.
 
2. அசினா – திருநங்கைகள் செயல்பாட்டாளர்

47 வயதான அசினா திருநங்கை..

• தான்பட்ட அவமானங்கள், வலிகள், புறக்கணிப்புகள் போன்றவைகளை தன்னைப்போன்ற திருநங்கைகள் படக் கூடாது என்பதற்காக குடும்பத்தினரால் புறக்கணிப்பட்ட ஆதரவற்ற த திருநங்கைகளை இவர் ஆதரித்து வருகிறார்..

• திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வார்கள், கடை வசூல் செய்வார்கள், மிரட்டி பணம் வாங்குவார்கள் என்ற சூழ்நிலையை புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லாமல் ஆக்க தொடர்ந்து போராடி வருகிறார்..

• தனது தொடர்ச்சியான முயற்சியில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடாத நிலையை உருவாக்கியுள்ளார்
 
• தனது தொடர் முயற்சியில் இதுவரை 41 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் இலவச வீட்டு மனைப் பட்டா பெற்று தந்துள்ளார்.

• மாவட்ட ஆட்சியர் மூலம் பெறப்பட்ட தனது குடியிருப்பில் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை தங்கவைத்து ஆதரவளித்து வருகிறார்.. தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகளின் மூலம் திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளை, பயிற்சிகளை செய்து வருகிறார்..
 
• இவரின் முயற்சியில் சமூக நலத்துறை மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை பெறப்பட்டு அரசின் திட்டங்களை பெற்று தருகிறார்..
 
• 18 திருநங்கைகளுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து உரிமம் பெற்றுள்ளனர். அதோடு மட்டுமன்றி தன்னிடம் நிலம் இல்லாத சூழ்நிலையிலும் கெளரவமாக வாழ கால்நடைகளை வளர்த்து வருகிறார்..
இதோடு மட்டுமன்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் போன்றவற்றின் கரைகளில் திருநங்கைகளை ஒன்றிணைத்து ஒரு கோடி பனை விதை நட வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.. சமூக புறக்கணிப்பில் இருக்கும் திருநங்கைகள் கெளரவமாக வாழ உழைக்கும் அசினா போற்றப்பட வேண்டியவர்.
 
3. ரவி- மலைவாழ் மக்களுக்கான உதவியாளர்

• 30 வருடங்களுக்கு முன்பு  விவசாயம் செய்ய குடும்பத்துடன் ஆத்தூரில் இருந்து தருமபுரி மாவட்டம் மலை கிராமத்திற்கு வந்தவர் ரவி…
 
• 4 ஆண்டுகள் கழித்து பெற்றோர்களுக்கு உடல் நலப்பிரச்சினை வர அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே செல்கிறார்கள்..
 
• ஆனால் அங்கு சுற்றியுள்ள ஐந்தாறு கிராம மலைவாழ் மக்களிடம் நெருங்கிய நட்பு கொண்டதால் ரவி அவர்கள் திரும்ப சொந்த ஊருக்கு செல்லவில்லை…
 
• அங்கு மலைவாழ் மக்களுக்கு மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருத்துவம் கிட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை… அந்த மலைகிராமங்கள் மூன்று பக்கம் மலையால் ஒரு பக்கம் காடால்  சூழப்பட்டு பெரிய போக்குவரத்தோ வேறு எந்த வசதிகளோ இல்லாத மலைகிராமங்கள்..
 
• இதனால் பல மனிதர்களும், கால்நடைகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். இதை தவிர்க்கும் பொருட்டு மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான அவசியமான  முதலுதவிகளை கற்றுக் கொண்டு மலைவாழ் கிராமங்களுக்கு எல்லாம் நேரம் காலம் பார்க்காமல் ஆபத்தான சூழ்நிலையில் உதவி செய்கிறார் ரவி ..
 
• சைக்கிள், பொது போக்குவரத்து பயணம் என ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..
 
• அதோடு மட்டுமன்றி அங்குள்ள மலைவாழ் மக்களின் பிள்ளைகள் பள்ளிக் கூடம் செல்வதும், படிப்பதும் குறைவாகவே இருந்து வந்தது.. இதற்காக ஒவ்வாரு வீடு, ஒவ்வாரு கிராமம் என அப்பிள்ளைகளுக்கு இலவசமாக  டியூசன் எடுக்கச் சென்று சொல்லி கொடுத்துள்ளார், அந்த காலத்திலேயே B.A (History) மற்றும் B. A (English literature) படித்த ரவி…

• இவர் சிறு வயதில் டியூசன் எடுத்த அப்பாவை இழந்த மலைவாழ் மாணவி இன்று IIT சென்னையில்  படித்து வருகிறார்..
மலைவாழ் மக்களின் நலனுக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் 70 வயதிலும் இளைஞர் போலச் சுற்றி வருகிறார் ரவி.
 
4. தெய்வராஜ்- மனநலம் குன்றிய மக்களுக்கான செயல்பாட்டாளர்

• 43 வயதான திருப்பூரைச் சார்ந்த தெய்வராஜ் முடிதிருத்தம் கடை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 23 வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார்..
 
• ஆதரவற்று திரியும் மனநோயளிகள், வயதான பிளாட்பார வாசிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களை முடி திருத்தம் செய்து, சீர்படுத்தி, உடைகள் அணிவித்து பல்வேறு காப்பங்களில் அவர்கள் அடைக்கலம் அடைய ஏற்பாடு செய்து வருகிறார்..
 
• இதோடு மட்டுமன்றி தொழுநோயாளிகளை முடி திருத்தம் செய்வது, ஆதரவற்று இறந்து கிடக்கும் மனிதர்களை அடக்கம் செய்வது, வாய்ப்புகள் கிடைக்கும் போதி உணவுகள் அளிப்பது போன்ற பல சமூகப்  பணிகளை செய்து வருகிறார்..
 
• இப்பணிகளை தன் முடிதிருத்தம் கடையில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பெரும்பாலும் செய்கிறார்..
 
• இவருடைய இந்த சேவைக்கு இவரைப் போல 30 தன்னார்வலர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி வருகிறார்கள்..
 
• மனநோயளிகள், வயது முதிர்ந்த ஆதரவற்றர்களை நாம் சீர்படுத்தினாலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடிவதில்லை. ஆதலால் இவர்களை ஒரே இடத்தில் தங்க வைப்பதற்காக காப்பகம் ஒன்றை கட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி பொருளாதார சிக்கல்கள் அவ்வெண்ணம் நிறைவேறாமல் உள்ளது…
 
5. சுதாகர் – வித்யாலெட்சுமி தம்பதியர் -எளிய மக்களுக்கு உணவளிப்பவர்கள்

✓ ஆரணியை சார்ந்த இவர்கள் தினமும் 100 பேருக்கான உணவு வீதம் கடந்த 1800 நாட்கள் (கிட்டத்தட்ட 5 வருடங்களாக) எளிய மக்களுக்கு உணவை அளித்து வருகிறார்கள்
 
✓ ஒரு நாளைக்கு 13 கிலோ அரிசி வீதம் தினமும் வீட்டிலேயயே சமைத்து வண்டியின் மூலம் வயதான மக்களுக்கு அளித்து வருகிறார்கள்…
 
✓ தயிர், தக்காளி, லெமன், பிரிஞ்ச் இந்த சாப்பாடுகளோடு புரோட்டினுக்காக வாரம் ஒரு முறை முட்டையும், சிக்கன் ஒரு துண்டும் அளித்து வருகிறார்கள்..  
 
✓ சமையல் செய்ய  பெரிய பாத்திரங்கள் கூட இல்லை… வீட்டிலயே 2 கிலோ வீதம் 6, 7 முறை உணவை தயார் செய்வது வித்யாலெட்சுமி மட்டுமே பேக் செய்து கொண்டு செல்வது சுதாகர் …
 
✓ தன் அப்பா, மாமனார் இறந்ந நாட்கள் தன் மனைவி பிள்ளைகள் கோவிட்டால் பாதிக்கப்பட்ட நாட்கள் போன்ற மோசமான நாட்களில் கூட இவர்கள் உணவு அளிப்பதை நிறுத்தவில்லை… இதோடு மட்டுமன்றி ஆரணியை சுற்றியுள்ள ஏழை மாணவர்கள் கல்விக்காகவும் உதவி செய்து வருகிறார்கள்.
 
✓ இந்த வருடம் இவர்கள் முயற்சியின் மூலம் 10 மாணவர்கள் கல்லூரி படித்து வருகிறார்கள்…
 
✓ இலவச உணவு என்பதால் குவாலிட்டியில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை இவர்கள்..
 
✓ முடிந்தவரை செய்வோம் சார்… ஒரு வேளை சாப்பாடுதானே… இன்னைக்கு நூறு பேருக்கு  தருகிறோம் முடியலனா நாளைக்கு 50 பேருக்கு தருவோம்…. கடைசி வரை எங்களால முடிஞ்சத கொடுத்துட்டே இருப்போம் என நம்பிக்கையுடன் பேசுகிறார் சுதாகர்..
 
6. செரினா- இருளர் குழந்தைகள்  செயல்பாட்டாளர்

செரினா பிறந்தது  தமிழ்நாடா இருந்தாலும் , வளர்ந்தது முழுக்க முழுக்க பெங்களூருல தான்.
• விடுமுறை நாட்களில் கல்பாக்கத்துக்கு வந்துபோகிற செரினாவுக்கு  அங்க இருக்க இருளர் சமூகத்து குழந்தைகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்குது.செரினாவுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்சாலும் , அதை விட  இந்த படிப்பு ,மக்களுக்கு நேரடியா போயி சேரணும்னு முடிவெடுத்து கல்பாக்கத்துல இருந்து இங்க உள்ள குழந்தைகளோட படிப்புக்கு வேலைபார்க்கணும்னு அங்க போயி நின்னப்போ,  யாருமே செரினாவ  ஏத்துக்கவே இல்லை.
 
• கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  ஒரு பையனுக்கு பல் விழுந்து எப்போதும் இரத்தம் வரும் சூழலில் அந்த பையன் இறந்துவிடுவான் என டாக்டர்கள் சொன்னபோது, பல மருத்துவமனையில் சேர்த்து நாலு நாட்கள் உடனிருந்து அந்த சிறுவன் உயிரை காப்பாற்றிருக்கிறார்.
 
• இச்சம்பவத்துக்கு பிறகு செரினாவ தங்களோட குடும்பத்துல ஒரு ஆளா ஏத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க  இங்க உள்ள குழந்தைகளோட கல்வி, சுகாதாரம்னு இதை மட்டுமே முன் வச்சு இயங்கிட்டு இருக்காங்க…
 
• செரினா இஙக வந்த சரியா ஆறு வருடம் ஆகிறது.. தான் பெரிய அளவுல மாற்றத்தை  இன்னும் பார்க்கலைன்னாலும் அடிப்படைகளில நிறைய விஷயங்கள மாத்திருக்கிறதா சொல்றாங்க..
 
• முதலில் இங்கு வரும்போது பசங்க டிரெஸ் போடமாட்டார்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் ஆனால் இப்போது 50 குழந்தைகள் பள்ளிக்கு போறாங்க, எல்லோரும் டிரெஸ் போட்றாங்க..  
• இவர்களுடைய பெற்றோர்கள் யாருமே படிக்காதவர்கள் இக்குழந்தைகள் முதல் முறையாக பள்ளி செல்கிறார்கள்
• இங்க இருந்து ஒரு டாக்டர், ஒரு போலீஸ் ஆபிசர் குறைந்தபட்சம் ஒரு நர்ஸையாவது உருவாக்க வேண்டும் என்பதே செரினா இலட்சியமாக கொண்டு இயங்குகிறார்..  
 
• இங்கு இந்த இருளர் பகுதியிலயே தனக்கான ஒரு குடிசை குடியிருப்பை நிறுவியிருக்கிறார்..
 
• தேவைப்படும் உதவிகளுக்கு அப்ப்ப டீ சர்ட், டிசைன், ரிங், செயின் போன்றவைகளை செய்து வரும் வருமானம், நண்பர்கள் உதவி என மிகச் சிரமமான நிலையிலும் தன்னோட இலட்சியத்துடன் இயங்கி வருகிறார் செரினா…

7. சு. பாரதிதாசன்- சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

✓ சு. பாரதிதாசன் தன்னுடைய சூழல் பாதுகாப்பு மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக்கான பயணத்தை 1990 களில் தொடங்கினார்.
 
✓ நண்பர்களுடன் இணைந்து அருளகம் எனும் அற அமைப்பை உருவாக்கி அதன் செயலராகவும் இருந்து வருகிறார்.
 
✓ அருளகம் அமைப்பானது அரிய மற்றும் அழிவபாயத்திலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மக்களோடு இணைந்து பாதுகாப்பதில் அக்கறையுடன் கடந்த 23 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது .
 
✓ மண்ணுக்கேற்ற தாவரங்களையும் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளைக் கவரும் தாவரங்களையும் வளர்க்கப் பூந்தளிர் நாற்றுப்பண்ணையையும் அருளகம் அமைப்பு மூலம் செயல்படுத்தி வருகிறார்.
 
✓ தற்போது அருளகத்தின் பூந்தளிர் நாற்றுப்பண்ணையில் சுமார் 130 உள்ளூர்த் தாவரங்கள் வளர்க்கப்பட்டு காடு உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
• தற்போது நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மிக அழிவு அபாயத்தில் சிக்கியுள்ள பாறுக் கழுகு இனத்தைப் பாதுகாப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.
 
• பாறுக் கழுகுப் பாதுகாப்பில் இவரது தனித்துவமான செயல்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக 2016- ஆம் ஆண்டில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படும் சிஇபிஎப் Critical Ecosystem Partnership Fund என்கிற பன்னாட்டு அமைப்பு ‘பல்லுயிர்ச் செழிப்பிட நாயகன்’ ( Biodiversity hotspot hero) விருதுக்கு உலகமெங்குமிருந்து 15 நபர்களைத் தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
• பாறுக் கழுகுப் பாதுகாப்பு’ தொடர்பான பணிகளை ஒழுங்கு செய்யத் தென்னிந்தியளவில் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
• அத்துடன் தமிழ்நாட்டு அரசு உருவாக்கியுள்ள பாறுக் கழுகுப் பாதுகாப்புக் குழுவிலும் (Vulture Conservation Committee) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
• தமிழ்நாட்டு அரசின் காட்டுயிர்ப் பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் (Tamil Nadu Wildlife Board) அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Books Written
1. பசுமைச் சிந்தனை– Published by Arulagam  — 2004
Quotable Quotes on Nature
2. காட்டின் குரல் – Published by Bharthi Puthakalayam  — 2012
Voice of the Jungle
3. பாறுக் கழுகும் பழங்குடியும் – Published by Uyir  — 2019
Vulture and Tribes
4. பாறுக் கழுகைத் தேடி– In Search of Vultures – Published by Kalam Kriya  — 2021 – a Bilingual (Tamil and English) Coffee table Book speaks about vultues (Tamil and English)
Book compiled
ஒரு மலையும் சில அரசியலும்- Dr. V. Jeevanatham – Published by Velicham – 2017 – Politics on Mountains – translated article from Prof. Madav D. Gadgil
Therikadum and Titanium – Dr. R. Ramesh, Mining issue in Tamil
 
8 புஹாரி ராஜா – சமூக ஊடக செயல்பாட்டாளர்

• இன்ஜினீயரிங் படித்துவிட்டு துபாயில் வேலை, கை நிறைய சம்பளம் என்றால் மனம் முழுக்க எளிய மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்கிற எண்ணம்.  
 
• வேலை உதறிவிட்டு மதுரை திரும்பியவர், ரேடியோ, பத்திரிகை, உதவி இயக்குநர் இப்படி பல வேலைகளை கள அனுபவத்திற்காகவும், பொருளாதார தேவைக்காகவும் செய்திருக்கிறார்.
 
• பின், தானே சுயமாக புஹாரி ஜங்ஷன் என்கிற சேனலை உருவாக்குகிறார்.  
 
• அதில் எளிய மனிதர்களின், சாதனைகளை, கதைகளை, வலிகளைப் பதிவு செய்யத் தொடங்குகிறார்.
 
• தற்கொலை முடிவிலிருந்த மனிதருக்கு தன்னம்பிக்கையான வாழ்வு, கவனம் பெறாத மக்களின் தேவைகளை கவனப்படுத்தியது என  பல மனிதர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது இந்த சேனல்.
 
• முழுக்க முழுக்க எளிய மனிதர்களின் உலகத்துக்கு அறிமுகம் செய்வது மட்டுமே இந்த சேனலைின் நோக்கமான இருந்திருக்கிறது.
 
• நாட்டுப்புற பாடகி, தியேட்டர் ஆபரேட்டர், பெட்ரோமாக்ஸ் லைட் கடை வைத்திருக்கும் நபர், தண்டோரா கலைஞர், பேனா மெக்கானிக், 50 ஆண்டுகளாக பஞ்சர் ஒட்டும் பெண்மணி, நாய்களுக்கு சிலை எழுப்பிய நபர் எனப் பல்வேறு தரப்பினர் அவர்தம் வாழ்க்கையை இவரிடம்  பகிர்ந்துகொண்டனர்.
• தனது சேனலில் ‘வியூஸ்’ குறைவாக இருந்தாலும், இவர்  பேட்டி எடுத்த நபர்களுக்கு உதவிக்கரங்கள் நீண்டன. அது இவருக்கு மிகப் பெரிய மன நிறைவைத் தந்தது.
 
• சில நேரங்களில் தனது  சேனலில் வெளியாகும் வீடியோக்களை பார்த்துவிட்டு பெரிய ஊடகங்கள், வசதி படைத்த யூட்யூப் சேனல்கள் அந்த நபர்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
 
• கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை அகற்றும் பணியில் ஈடுபடுபவரைத் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் செய்துள்ளாலர். அவரது பேட்டியைப் பார்த்துவிட்டு தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டதாகக் கூறி ஒரு தம்பதி நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
 
• பின்னர், இன்னொரு முறை கோத்தகிரியில் ஆறு பெண் குழந்தைகள் கை கால் பக்கவாதத்தால் முடங்கிய நிலையில் இருந்த தங்களது தாயை, அன்போடு பார்த்துக் கொள்ளும் காணொளியை வெளியிட்டுள்ளார்.  வீடியோவை பார்த்துவிட்டு அறக்கட்டளை ஒன்றின் மூலம் அந்தச் சிறுமிகளுக்கு கல்வி பயில உதவி கிடைத்தது..
இப்படி தன் சேனல் மூலமாக எளிய மக்களின் நிலையை விளக்கும் புஹாரி ஜங்சன் சேனல் மூலமாக எளிய மக்களின் வாழ்க்கையை அடுத்தகட்டததிற்கு நகர்த்தியுள்ளார் இந்த எளிய மனிதர்.
 
9. நாகராஜ் – கிராமப்புற சுய உதவிக்குழுக்கள் ஒருங்கிணைப்பாளர்

• சுயஉதவி குழுக்கள் பற்றிய அறிதலும் புரிதலும் இல்லாத காலகட்டத்தில் நோபல் பரிசு பெற்ற வங்க தேசத்தின் முனைவர் முகம்மது யூனுஸ் அவர்களின் சசேவையால் ஈர்க்கப்பட்டு 1997 இல் மைக்ரோ கிரெடிட் பவுண்டேஷன் ( கிராம சுடர் ) எனும் சேவை அமைப்பு  திரு மணிசுந்தர் அவர்களால் துவங்கப்பட்டது  அதன் திட்ட தலைவராக  திரு நாகராஜன் அவர்களை கொண்டு  அன்று முதல்  இன்று வரை இயங்கி வருகிறது.
 
• இவ்வமைப்பு குறிப்பாக  கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை பெண்களின் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து செயல்பட்டு வருகிறது
 
• நாகராஜ் அவர்களின் சீரிய பணியின்  மூலம் இந்த சேவை சுமார் 10000 குடும்பங்களை சென்றடைந்துள்ளது. ஏழை மக்களின் தேவையான கல்வி, இருப்பிடம், கழிப்பிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அவசிய தேவைகளை பெறவும்,சேமிப்பு பழக்கத்தையும் வங்கி கடன் பெற தேவையான தகுதியையும் -பெற முனைப்பு காட்டி வருகிறது.
 
• மேலும் கல்வி கடன் வழங்கியதன் மூலம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளை இவ்வமைப்பு உருவாக்கியுள்ளது ( மருத்துவர்கள், பொறியாளர்கள்.. etc)  இவ்வமைப்பின் சீரிய பயணிகளால் சிலகோடி ரூபாய் சேமிக்கவும் பலகோடி ரூபாய் வங்கி கடன் பெறவும் தகுதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 
• குறிப்பாக சுமார் ரூபாய் 50 கோடி சேமிக்கப்பட்டும் வங்கிக்கடனாக சுமார்  ரூபாய் 100 கோடிக்குமேல் வழங்கப்பட்டும் உள்ளது. வங்கி கடனில் வங்கிகள் வழங்கும் கடன் வெறும் காகிதத்தால் ஆன பணம் என்று மட்டும் நினைக்காமல் வங்கி வழங்கும் கடன்தொகை பொதுமக்களின் உழைப்பால் எதிர்கால தேவைகருதி பாதுகாப்பாக வைக்கப்பட்ட தொகை என்பதையும் அதனை எவ்வாறு நாணயமாகவும் நேர்மையாகவும் வங்கிக்கு திருப்பி செலுத்தவேண்டும் என்பதையும் புரியவைத்து தொடர்ந்து அவர்களின் தேவைகளுக்காக இயங்கி வருகிறது.
 
10. அ.ரபேல்ராஜ், பழங்குடியினருக்காக கல்வி செயல்பாட்டாளர்

இந்தியாவில் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக செயல்படுகின்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கக்கனூர்- மங்களபுரத்தில் ‘’கவசம்” என்ற பணித்தள அமைப்பின் மூலம் செயல்பட்டு வருகின்றது.
கவசம் கல்வி மற்றும் சமூகச் செயல்பாட்டு மையமாக செயல்படுகின்றது. இம்மையத்தில் உள்ள விடுதியில் ஏழை, எளிய குழந்தைகள் சுமார் 50 பேருக்கும் மேல் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக கவசம் எனும் இம்மையத்தின் மூலம் பழங்குடி இருளர் மக்களின் மேம்பாடு, நலன் மற்றும் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமைகளுக்காகவும் பங்காற்றி வருகின்றது.
பழங்குடி இருளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு, சாதிச் சான்று கிடைப்பதற்கும், இருளர் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி வகுப்புகளை கவசம் மையத்திலேயே 15 நாட்களாக தங்க வைத்து நடத்தியுள்ளார்.
தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சித்தலிங்கமடத்தில் உள்ள நீதிபதி கே.சந்துரு குடியிருப்பில் 85 வீடுகள், வீரணாமூர் கிராமத்தில் 26 வீடுகள், தென்னேரி கிராமத்தில் 39 வீடுகள் என இதுவரை கட்டப்பட்டுள்ளது. அரசு வழங்கும் நிதியுடன், கவசம் – கிளாரெட் சபை மூலமாக கூடுதல் நிதியுதவி வழங்கி வீடுகளில் மெத்தை மற்றும் படிகள் கட்டித்தர உதவி வருகின்றார்.
கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
திண்டிவனத்தில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளித்து வரும் தாய்த் தமிழ் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்வி மற்றும் மதிய உணவுக்கு உதவி வருகின்றார்.

11. டெய்சிராணி- கிராமப்புற சுகாதார செயல்பாட்டாளர்

14 வருடங்களாக நர்ஸ் பணியில் உள்ளார்.. தஞ்சாவூர் பக்கம் புனல்வாசல் கிராமத்தில் 10 வருடங்களுக்கு மேலாக வேலை செய்துள்ளார்.
அந்த நேரத்தில் அதிகமான கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் போது, அரசு மருத்துவமனை பற்றியும் அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துக் கிறி அரசு மருத்துவமனையை நாட வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.
அது மட்டுமன்றி இரவு நேரத்தில் பிரசவசம் ஏற்படும் போது  முதலில்  அந்த கிராம எளிய மக்கள் அழைப்பது இவரைத்தான். இரவில் வண்டி எடுத்து வந்து அழைத்து செல்வதோ அல்லது எதுவும் இல்லாத குடும்பத்தினருக்கு இவரே 108 அழைத்து சென்று முதல் உதவி செய்வது என தொடர்ந்து அக் கிராம மக்களின் கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து இயங்கி உள்ளார்..
10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இடத்தில் இருந்து தற்போது பணி மாறுதல் பெற்று கடந்த 1 வருடமாக திருச்சி மாவட்டத்தில் பணி செய்து வருகிறார்..
 
12. விஜய் (எ) விஜயகாந்த்- விலங்கு நல ஆர்வலர்

அவினாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் 38 வயதான விஜய்..
✓ 15 வருடங்களுக்கு மேலாக பாம்பு பிடித்து அதை பாதுகாப்பாக காடுகளில் விட்டு வருகிறார்.. இதுவரை அதுப்போல இலட்ச கணக்கான பாம்புகளை காப்பாற்றியுள்ளார். அதற்காக யாரிடம் பணம் வாங்குவதில்லை இலவசமாகவே செய்து வருகிறார்.. 100 கணக்கான பாம்பு பிடிக்கும் இளைஞர்களையும் உருவாக்கியுள்ளார்.
 
✓ இதோடு மட்டுமன்றி தெருவில் ஆதரவின்றி இருக்கும் நாய் குட்டிகள், அடிபடும் நாய்கள் போன்றவற்றை எடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறார். தற்போது நாய்களாகவும் குட்டிகளாஎவும் 144 நாய்கள் உள்ளது.. இதை தனியாக வாடகை எடுத்து பராமரித்து வருகிறார்.
 
✓ அதோடு மட்டுமன்றி அவருடை அண்ணா நினைவாக தினமும் காலை 30 சாப்பாடு அவினாசியில் அளித்து வருகிறார்..
 
✓ இவைகளுக்காகவே காலை 3 மணியிலிருந்து இரவு 11 மணிவரை பல்வேறு பணிகளை செய்து வருகிறார்..மனைவி சம்பாதியத்தில் குடும்பமும் இவர் சம்பாதியத்தில் இதுப் போல பணிகளும் நடக்கிறது. பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
 
13. ஜோஷ்வா -பழங்குடி செயல்பாட்டாளர்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, வீரபாண்டி பஞ்சாய  த்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மலைகிராமங்களில் , குழந்தைகளின் பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மருத்துவம் வசதிகள் , அரசு உதவிகள் , வீட்டுக்கொரு கழிப்பிடம் , கால்நடைகளுக்கு மருத்துவம், ஆனைகட்டி, கொண்டனூர், தூமனூர் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், உள்ளிட்ட மக்களின் தேவைகளை உணர்ந்து, கொடையாளர்கள் மூலம் உதவிகளை பெற்று கொடுத்துள்ளார். ஆனைகட்டி மலைகிராமத்திலேயே தங்கி , மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு பணி செய்து வருகிறார்.
 
கண்டிவழி மலைவாழ் மக்களுக்காக, அரசு கொடுத்த 1.80.ஆயிரம் மாணியத்தொகையுடன் காந்திபுரம் 2 ஆவது வீதியில்,  தனது சொத்தை விற்று வந்த பணம் 18 லட்ச ரூபாயை செலவு செய்து. 2020 ல் 5 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளார்.
அதே பகுதியில் மேலும் 7 வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு மாணியத்தொகை 3 லட்சத்துடன் , ராக் அமைப்பின் மேற்பார்வையில் ,  ப்ரப்பெல்( profel) நிறுவனம் வழங்கிய 10.5 லட்சம் ரூபாயில் 6 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இரு மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஒரு வீட்டிற்கான பணி நடந்து வருகிறது.
 
14. மணிகண்டன் – கிராமப்புற மாணவர்களுக்க்கான விளையாட்டு பயிற்சியாளர்

தஞ்சாவூர் பாப்பநாடு கிராமத்தில்  மாணவர்களுக்கு தற்போது இவரும் இவருடைய நண்பரும் இணைந்து பயிற்சி அளித்து வருகின்றனர்..கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்..இவரிடம் பயிற்சி பெற்ற பலர் இராணுவம், ரயில்வே போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதோடு மட்டுமன்றி இவர் கிராமப் புற அரசு  மாணவர்கள் மிகுந்த ஏழை மாணவர்கள் என்பதால் யாரிடமும் பணம் பெறுவதில்லை.. இவருடைய இந்த முயற்சிக்காக நண்பர்கள் மாதம் 5000 ரூபாய் அளிக்கின்றனர்.. இவருடைய பயிற்சி பெற்ற பல மாணவர்கள் மாவட்ட, மாநில, பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.
 
15. ஆறுமுகம் – சமூக செயல்பாட்டாளர்

தனது ஆசிரியர் பணி போக, பழவேற்காடு மற்றும் பொன்னேரி பகுதிகளில் இருளர் இருளர் மக்கள் வாழும் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து, அவர்களுக்கு இலவச மாலை நேர பாட சாலை, படிப்பு, அறிவு, உரிமை பெறுதல், உணவு வழங்குதல், ஆடைகள் வழங்குதல், சுய வேலை வாய்ப்பு உருவாக்குதல் என பல்வேறு பணிகளை 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்துவருகிறார். முதியோர்கள், விதவைகள், சிறுவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் உருவாக்கி அதை  செயல்படுத்தி வருகிறார்.
 
16. சந்துருகுமார் – இரத்ததான ஒருங்கிணைப்பாளர்

ரத்த தானம் என்றால் அப்பகுதியில் நினைவிற்கு வரும் அளவிற்கு, தொடர்ந்து ரத்த தானம் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதற்க்கான குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
மனிதம் காப்போம் குழு துவங்கி விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் திருவண்ணாமலை புதுச்சேரி தொடர்ந்து 4 ஆண்டு காலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசரகாலத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரை  இரத்ததானம் செய்ய வைத்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தில் கிடைக்கும் சலுகைகளை மற்றும் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை மூன்று சக்கர வாகனம் என பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
சமூக சேவைகள்
20 க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்களை ஒருங்கிணைத்து ரத்ததானம் செய்துள்ளார்.
*10 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி கட்டணம் செலுத்தியது.  *மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் பெற உதவி
*கல்விக்கு கரம்  கொடுப்போம் என்கின்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் வறுமை நிலையில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தாய் தந்தை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் கல்வி உபகரணங்கள் உதவிகள்.
*பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு
கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை செய்துள்ளார்.
 
17. பாக்கியலெட்சுமி – ஆதரவற்ற பெண்களுக்கான செயல்பாட்டாளர்

✓ 2018 கஜா புயலில் தென்னைமரங்களுக்கு இழப்பீடாக கிடைத்த சுமார் 1.5 லட்சம் நிவாரண பணத்தில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வாலிபால் மைதானம் அமைத்து கொடுத்துள்ளார்..
 
✓ ‘அன்னம் பகிர்ந்திடு’ என்ற பெயரில் கொரனா காலக்கட்டம் தொடங்கி இப்போது வரை நாள் தவறாது ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்குவதோடு அவர்கள் சிறு சிறு வருமானம் பெற உதவுதல்  அவர்களுக்கு மருத்துவ உதவி மேலும் உயிரிழந்தால் அடக்கம் செய்தும் வருகிறார்.
 
✓ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவை பெண்கள்,மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தேவையான உதவிகளை நேராடியாகவும் மாவட்ட சமூக நல அலுவலர் கவனத்திற்கும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு சென்று உதவி வருகிறார்.
 
✓ இதன் தொடர்ச்சியாக தற்போது பேராவூரணியில் அன்பில் நாம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனை மற்றும் உதவியோடு அரசு கட்டிடத்தில் அன்பில் நாம் இல்லம் என்ற ஆதரவற்ற முதியோர் காப்பகத்தினை தொடங்கி ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்து பராமரித்து வருகிறார்.
 
18. மஞ்சரி – ஊர் கிணறு புனரமைப்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சரி
✓ அடிப்படையில் கட்டிடவியல் (Architecture) பட்டம் பெற்று மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் பணி செய்தவர்.. பெரிய பெரிய கட்டுமான பணிகளில் இருந்தாலும் வீடு என்பது சாலையோர மக்களுக்கு பெரும் கனவாக இருக்கிறது. இருப்பவர்களுக்கு மட்டுமே வீடு இருக்கிறது இங்கு இல்லாத மக்களுக்கு எதுவும் இல்லை என அவருக்கு வருத்தம் உண்டாகிவுள்ளது. பிறகு பழைய கட்டிடங்களை புனரமைத்து தருவது போன்ற பணிக்கு வருகிறார்..
இதில் ஒருமுறை குக்கு காட்டுப்பள்ளி சிவராஜ் அவர்களை சந்திக்கும் போது அவர் நெருப்பு தெய்வம்நீரே வாழ்வு என்ற புத்தகத்தை அளித்துள்ளார்.. அது இவருடைய தூக்கத்தை கெடுத்து பலவாறு யோசிக்க வைத்துள்ளது. இப்புத்தகத்தில் நிகமானந்தா என்ற ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கு குழந்தைகள் புற்று நோய் வந்தும், தலை மட்டும் 20 கிரோவுடனும், எலும்பு கூடாகவும் இருந்துள்ளனர். இதற்கு காரணம் அவர் தேடிய போது குடி தண்ணீரில் கலக்கும் இரசாயன கழிவு என்பது அவருக்கு தெரிகிறது.. இதை கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருக்கிறார் 80 வது நாளில் அவரை BBC மட்டும் சின்ன பேட்டி காண்கிறது.. அவர் 144 வது நாளில் மரணிக்கிறார்.. இதை கேள்விப்பட்டு சி.டி அகர்வால் என்ற சயின்டிஸ்ட் ஒருத்தர் உண்ணாவிரதம் இருந்து அவரும் மரணிக்கிறார் ஆனால் மாற்றம் மட்டும் வரவே இல்லை.. இப்படி தண்ணீருக்காக பல உயிர்கள் பலியாகி உள்ளது..
 
✓ இதே நேரத்தில் குக்கு காட்டுப்பள்ளி பக்கம் புலியனூர் என்ற கிராமத்தில் மக்கள் ஒரே ஒரு மணி நேரம் வரும் தண்ணீருக்காக ஒரே ஊரே காத்திருப்பதை காண்கிறார்கள்..
 
✓ அதை இவர்கள் விசாரிக்க தண்ணீர் பிரச்சனை பற்றி சொல்ல, அங்கு பயன்பாடுன்றி இருக்கும் கிராம பொது கிணறை நண்பர்கள் உதவியுடன் மீட்டெடுத்து மக்களுக்கு அளித்துள்ளனர் இதுதான் முதல் பணி.. இப்படி தண்ணிருக்காக பல கிலோ மீட்டர் செல்லும் ஊரில் உள்ள கிராம பொது கிணறுகளை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கிறது இந்த குழு..
 
✓ சமதளப் பகுதியில் மட்டுமின்றி வண்டிகள் செல்ல முடியாத மலைக்கிராமங்களிலும் இவர்கள் அங்குள்ள ஊர் கிணறுகளை மீட்னுடெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்து அவர்கள் தாகத்தையும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு குடத்தை எடுத்துச் செல்லும் இன்னல்களையும் போக்கி வருகின்றனர். இதுவரை 13 ஊர் கிணறுகளை மீட்டெடுத்து மக்களுக்கு அளித்துள்ளனர்..
 
19 . மதுமிதா கோமதிநாயகம் – மாற்று திறனாளிகள் செயல்பாட்டாளர்.

✓ இந்தியாவின் முதல் திருநங்கை மனித வள மேலாண்மை (HR Professional ) பட்டம் பெற்று பணியில் இருப்பவர்.
 
✓ கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மாற்று திறனாளிககள், முதியோர்கள் போன்ற வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.  
 
✓ மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கால், வீல் சேர், ஸ்டிக் இப்படி அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை தன் உழைப்பின் மூலமாகவும், தன் நண்பர்களிடம் உதவிப் பெற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களில் செய்து வருகிறார்.  
 
✓ அதோடு மாற்று திறனாளின் பிள்ளைகள் படிப்புக்கான உதவி, சீருடை, நோட் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுக்கிறார்..  மாற்று திறனாளிகள் பெண்களுக்கு தேவையான கேஷ் டவ் போன்றவற்றையும் உதவி வருகிறார்.  இதோடு மட்டுமன்றி ஆதரவற்ற மூதாட்டிகள், கணவனை இழந்த கணவனால் கை விடப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்..
✓ மாற்று திறனாளிகள் குடும்பத்தினருக்கு மாதம் 20 கிலோ மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறார்.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு , திருநங்கைகள் படிப்புக்கான வழி காட்டுவது, கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது  சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கொரானா காலங்களில் தேவைப்பட்ட உதவி போன்றவற்றிலும் தன்னை தன்னார்வலராக இணைத்து சேவையாற்றி வருகிறார்..

20. தேவி- குழந்தைகள் செயல்பாட்டாளர்

கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் தேவி அவர்கள். அங்குள்ள வட்டார வள மையத்தில் பணி புரிகிறார். இந்த வட்டார வள மையம் என்பது மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்புப் பள்ளியாக செயல்படுகிறது.. இதில்தான் தேவி அவர்கள் வேலை செய்கிறார்..
அவர் இம் மையத்தில்  இருக்கும் குழந்தைகள் கை கால்களில் சிராய்ப்பு ஏற்படுவதால் அம் மையத்திற்கு தன் சொந்த முயற்சியில் டைல்ஸ் ஒட்டியுள்ளார். அதோடு அந்த மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கியதோடு அதை வைக்க இடமின்றி இருந்த போது அதற்கான பீரோ போன்றவற்றையும் தன் முயற்சியில் கொண்டு வந்துள்ளார்.
இது மட்டுமின்றி இந்த குழந்தைகள் இயற்கை உபாதைகள் அவர்களுக்கே தெரியாது. அதுவும் இரவில் என்றால் பெற்றோர்கள் வந்து பார்த்தால் மட்டுமே தெரியும்… இரவில் சிறுநீர் மலம் கழித்து விட்டால் அவர்கள் நிலை படு மோசம்.. இதற்காக அம் மாணவர்களுக்கு தினமும் பல மக்களிடம் உதவிப் பெற்று டயாப்பார் வாங்கி கொடுக்கிறார்.
கொரானா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் இக் குழந்தைகளின் குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கி அளித்துள்ளார்.
தனியாக உள்ள விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், இக் குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல உட்கார முடியாததால் அவர்களுக்கு ஏதுவான உபகரணங்கள் என வாங்கி அளிக்கிறார்..
அதோடு சுற்று வட்டார பள்ளிகளுக்கு செல்லும் போது இப்படிபட்ட மாணவர்களை கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறார்..மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் தொடர்ந்து உதவி வருகிறார்.

21. உறவுகள் அறக்கட்டளை – அமரர் செயல்பாட்டாளர்கள்

2017 ஆம் ஆண்டு முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  போன்ற மாவட்டங்களில்  ஆதரவற்று இறப்பவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.. மாதத்திற்கு 130 உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். ரயிலில் அடிபட்ட உடல்கள், தூக்கில் இறப்பவர்கள், அழுகிப் போன உடல்கள் போன்றவர்களை அடக்கம் செய்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் மரணம் அடைந்த 144 உடல்களுக்கு அவர்களின் மதமுறைபடி நல்லடக்கம் செய்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 1473 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். இதோடு சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்து ஆதரவற்ற இல்லம் போன்றவற்றில் சேர்த்து விடுகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்குள் சமத்துவ மயானம் உருவாக முயற்சித்து வருகிறார்கள்.

22. வியாசை தோழர்கள் – கல்வி மற்றும் பேரிட செயல்பாட்டாளர்கள்.

சாக்கடையான இடத்தை சுத்தம் செஞ்சு தயார் படுத்திகிட்டே,  மறுபக்கம் எங்க தம்பி சதீஷ் வீட்டு மொட்ட மாடியில 2016ம் வருஷம் “Dr.அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலை” ன்ற பெயர்ல பாடசாலைய நடத்த ஆரம்பிச்சோம்.
அப்பறம் எங்க ஊர்ஜனங்களோட பக்கபலத்தால எல்லா பிரச்சனைகளையும் கடந்து, தெருத்தெருவா உண்டியல் வசூல் செஞ்சு சமூக அக்கறையுள்ள நபர்கள்கிட்ட நிதி வசூல் செஞ்சு எங்க தெருமுனை மைதானத்துல எங்க  இரவு பாடசாலைய கட்டி முடிச்சோம்.
எங்க ஏரியா பிள்ளைங்கள கஞ்சா, குடின்னு திசை திரும்பாம எங்களால முடிஞ்ச அளவு கல்வி பக்கம் திருப்பினோம். இன்னொருபக்கம் சர்வதேச அளவில பதக்கம் வாங்குன எங்க குழு நண்பர்கள வச்சு கபடி, கேரம், செஸ், சிலம்பம் விளையாட்டு பயிற்சி குடுக்க ஆரம்பிச்சோம். கூடுதலா Computer Class, Communication Class, Children safety class லாம் நடத்திகிட்டிருக்கோம்.
இப்ப கல்வி, விளையாட்டு எல்லாம் சேத்து மொத்தம் 15 ஆசிரியர்கள வச்சு பாடசாலைய சிறந்த திசையில நடத்திகிட்டிருக்கோம். 190 பசங்க படிக்குறாங்க.
 
அதுல பல பிள்ளைங்க அம்மாவோ, அப்பாவோ இல்ல ரெண்டுபேருமோ இல்லாத பிள்ளைங்க. 7 வருஷமா 100% Result குடுத்துகிட்டிருக்கோம்.
இது இல்லாம, 2015 சென்னை பெருவெள்ளம், கஜா புயல், நிவர் புயல்ன்னு எல்லா நேரத்திலும் மக்கள அவதிப்படும்போது எங்களால ஒரு முடிஞ்ச குண்டூசி அளவு பங்களிப்ப செஞ்சிருக்கோம். எதுவுமே முடியலனாலும் ஒரு ஆறுதலாவும், ஆதரவாவும் இருந்துகிட்டுவரோம்.
மின்சார வாரியம் பிரச்சனை, தாசில்தார் ஆபிஸ் பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, ஆதார், ரேஷன்கார்டு, சாக்கடை பிரச்சனை உட்பட மக்களோட பிரச்சனைகள்ல முடிஞ்ச அளவு வேலை செஞ்சுகிட்டிருக்கோம்.
கூடுதலா இரத்ததான முகாம், சட்ட உதவி முகாம், மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், விளையாட்டுத் திருவிழா, பொங்கல் திருவிழா, கல்வித்திருவிழானு ஊர் ஜனங்கள இணைச்சு நிகழ்ச்சிகள நடத்திகிட்டு வறோம்.

 
அதுமட்டுமில்லாம எங்க Team ல தனிக்குழு அமைச்சு மக்களோட அவசர பிரச்சனைகளுக்கு போலிஸ் ஸ்டேஷன், நீதிமன்றை, சட்ட உதவி செஞ்சுகிட்டிருக்கோம்.
இப்டி எங்க சக்திக்கு உட்பட்டு மக்களுக்கான சமூக பணிகள செஞ்சிகிட்டிருக்கோம்.
இந்த சூழ்நிலையிலதான் 2020ம் வருசம் கொரொனா பெருந்தொற்று வந்துச்சு. கொரொனாவ விட எங்க மக்களுக்கு ஊரடங்குதான் பெரிய பாதிப்பா இருந்துச்சு. அப்ப  பசங்கெல்லாம் சேந்து, ஊரடங்கால பாதிக்கப்பட்ட சுமார் 800 குடும்பங்களுக்கு நாங்களே வீடுவீடா போய் அரிசி, காய்கறி பொருட்களையும், சிலருக்கு உதவித்தொகையும் குடுத்தோம். சுமார் 2000 பேருக்குமேல ஒருவேளை சாப்பாடு குடுத்தோம்.  
கொரோனா இரண்டாவது அலையில ஆம்புலன்ஸ் தேவை, ஆக்ஸிஜன் தேவை, கொரோனா படுக்கை தேவை, ரெம்டெசிவர் மருந்து தேவை, தடுப்பூசிகள் தேவை இப்படி பல தேவைகள் எங்க கண்முன்ன இருந்துச்சு. பணம் இருக்கவங்களே ஆக்ஸிஜன் இல்லாம தவிச்ச நேரம் அது. அப்ப “ஆக்ஸிஜன் வசதியுடன்கூடிய இலவச ஆட்டோ ஆம்பலன்ஸ் சேவை” செய்ய முடிவு பன்னி, முதல்ல ஒரு ஆட்டோவ ரெடி பன்னி, அடுத்தடுத்து 10 ஆட்டோக்கள ” இலவச ஆக்சிஜன் ஆம்புலன்சுங்களா” மாத்தினோம். ஆட்டோக்களை Non covid Patientsகாக ஏற்பாடு செய்தோம். முல்லை நகர் Platformல பந்தல் போட்டு “ஆட்டோ ஆம்புலன்ஸ் முகாம்” அமைச்சு அங்கயே சாப்ட்டுகிட்டு, தூங்கிக்கிட்டு 24×7 நேரமும் ஆம்புலன்ஸ் சேவை செஞ்சுகிட்டிருந்தோம். அதோட விளைவு, விலைமதிப்பில்லா 450 க்கும் மேற்பட்ட உயிர்கள காப்பாத்தப்பட்ருக்காங்க. என முடிக்கிறார்கள் இவ் வட சென்னை இளைஞர்கள்..23. ஹரி கிருஷ்ணன் – தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர்

கொரோனா காலத்தில், அரசுக்குத் துணையாக 50 பேர் கொண்ட தன்னார்வலர்கள்  படையை உருவாக்கி, சென்னை வாழ் மக்களின்  தேவையை அரசின் சார்பாகப் பூர்த்தி செய்யும் பணியில் தலைமை ஏற்று வழிநடத்தியதோடு,  வட மாநில  புலம் பெயர் தொழிலாளர்களை மீட்டு பத்திரமாக ஊருக்கு அனுப்பும் பணியினை செய்து தமிழக அரசாங்கத்தால் பாராட்டப் பெற்றவர்.
2021 ஆம் ஆண்டில், அரசு மருத்துவமனையில் உயிரைப் பயணம் வைத்து   நோயாளிகளைக் காப்பாற்ற நேரடியாக  உதவியது, ஆக்ஸிஜன் பற்றாக் குறையால் மயங்கி விழுபவர்களைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியது,
 
கொரோனா தொற்றின் வீரியம்  காரணமாக, தமிழக அரசுடன் கை கோர்த்து “தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு” உருவாக்கி அதில் 38 மாவட்டங்களிலும் 1500 தன்னார்வலர்களை இணைத்து, உயிருக்குப் போராடும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை உள்ளேயே இருந்து பாதுகாப்பு கவசங்களுடன்,உணவு வழங்குவது,
கழிவறை செல்ல உதவுவதுமருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தேவையான உதவிகள் செய்வது ஒரு குழு,கொரோனா தொற்றாளர்களுக்கு அறிவுரை வழங்க ஒரு குழு, மருத்துவமனை, படுக்கை இருப்பு குறித்துத் தெரிவிக்க ஓர் குழு, உயிருக்குப் போராடும் நிலைக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை செல்ல ஒரு குழு, தனிமைப் படுத்தியவர்களுக்கு உணவு வழங்கக் குழு,  வீடற்றவர்களுக்குச் சேவை செய்யக் குழு, தற்கொலைக்கு முயல்பவர்களைத் தடுத்து ஆலசோனை வழங்குதல், ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உதவ ஓர் குழு, ரத்த தானத்துக்குக் குழு, ஒருவேளை இவை அனைத்தும் தோல்வி அடைந்து, அவர்கள் உயிரிழந்தால் இறுதிச் சடங்கு வரை என அனைத்தையும் மேற்கொள்ள என சுமார் 12 குழுக்களை உருவாக்கி, அவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களுக்கு உதவி செய்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஆதரவற்று ரோட்டோரம் வசிக்கும், முதியோர்கள், தொழு நோயாளிகளை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளித்து, காவல் துறையுடன் இனைந்து அவர்கள் வீட்டில் பத்திரமாகச் சேர்ப்பது.
முதலமைச்சரின் ஒரு கோடி பனை விதைகள் நடும்  நெடும் பணியை ஒருங்கிணைத்தல், மழை, வெள்ளம், புயல் போன்ற அணைத்து பேரழிவுகளிலும், இப்போது வரை ஏற்பட்ட பெருமழை, பெருவெள்ளம் வரை, களத்தில் இறங்கி பொது மக்களைக் காப்பாற்றுவது. தற்போது ஏற்பட்ட சென்னை புயல் மற்றும் தென் தமிழக மழையில், சுமார் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து,  பேரை மீட்கப்பட்டு, பல ஆயிரம் பேருக்கு  அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய காரணமாக இருந்துள்ளார்..
தமிழக முழுவதும் சமூக சேவை செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசுக்குப் பக்க பலமாக, சம்பளம் வாங்காத முன் களப்பணியாளர்களாக செயல்படுவதோடு, சென்னை ஐஐடி  யில், அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமங்களில் வாழும் ஏழை குழந்தைகள் இந்த வாய்ப்பை பெரும் விதமாக உருவாக்கப்பட்ட அனைவருக்கும் ஐ ஐ டி மெட்ராஸ் திட்டத்திற்குப் பொறுப்பேற்று, 2 வருடங்களில், சுமார் 80,000க்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, இன்று பல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி  யில் பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தானே களப்பணியாகவும், சமூக ஆர்வலராகவும், தன்னார்வலராகவும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார் ஹரி.

24. V. P. குணசேகரன், சமூக செயல்பாட்டாளர்.

அடிப்படையில் சக்கரை ஆலைய பொறியாளரான அவர் அதை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக களத்திற்கு வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களின் நலன் சார்ந்த, உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு போராடியும் உதவியும் வருகிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பழங்குடி மக்களிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையை வெளிக் கொண்டு வந்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. கொரானா காலத்தில் பல இடங்களில் உதவிப் பெற்று மலைவாழ் மக்கள் பசியாற உதவியவர். இவரின் தொடர் முயற்சியில் மலைக் கிராமங்களில் வந்த பள்ளிகள் ஏராளம்.
இவரது முன்னெடுப்பு மூலமாக அண்மையில் பழங்குடிகளுக்கான மறுவாழ்வு மையம் ஒன்றை தாமரைக்கரை அருகே சுமார் 50 லட்சம் செலவீட்டில் தங்கள்  தோழர்கள்  பங்களிப்பில் ஒரு  மிகப்பெரிய கட்டிடத்தைக் கட்டி உள்ளார் ..

 

இன்றும் மலைவாழ் மக்களின் நலனுக்காக, கல்விக்காக, மருத்துவத்திற்கான என தொடர்ந்து உதவிக் கொண்டும், திட்டங்கள் வகுத்து செயலாற்றிக் கொண்டும் வருகிறார்.

25. டெரிக் ஹட்சன் – விளையாட்டு துறை செயல்பாட்டாளர்

பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியராக பணி புரிவதோடு ஒரு விளையாட்டு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.. இவர் வைத்துள்ள சாந்தோம் விளையாட்டு பயிற்சி அமைப்பின் மூலம்  மாணவர்களுக்கு இலவச  பயிற்சி அளித்து அவர்களை  விளையாட்டு துறையில் சாதனையாளராக்கி வருகிறார்…

 
இதோடு விளையாட்டில் ஆர்வம் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்து  இலவசமாக பயிற்சியும் அளித்து வருகிறார்.
 
இவரிம் பயிற்சி பெற்ற பல பேர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதனை படைத்து வருவதோடு அரசுப் பணியிலும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்..