பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் உறுதி

அரசு போக்குவரத்து கழகங்களில், 2.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கும், ஓய்வூதியர்களுக்குமான பணப்பலன்கள் நிலுவையில் உள்ளன. அத்துடன், 2016 செப்., முதல் அமலாக வேண்டிய, 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்தும், இன்னும் பேச்சு முடியவில்லை. இதனால், வரும், 15ம் தேதி முதல், காலவரையற்ற, ‘ஸ்டிரைக்’ நடத்தப்போவதாக, தொழிற்சங்கங்கள் அறிவித்தன. போராட்டத்தை தடுக்க , ஊதிய ஒப்பந்தம் குறித்து, நான்காம் கட்ட பேச்சு நடத்த, இன்று காலை, 10 மணிக்கு, சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் ஊதிய ஒப்பந்த குழுவினர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், போக்குவரத்து கழகத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்க முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர், திட்டமிட்டபடி மே 15 முதல் ஸ்டிரைக் நடைபெறும். ரூ.750 கோடி நிலுவைத்தொகை அறிவிப்பை ஏற்க முடியாது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க அரசு தான் காரணம். ரூ.7 ஆயிரம் கோடியை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.