காக்னிசன்ட் 9 மாத சம்பளத்துடன் மூத்த ஊழியர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கான்னிசன்ட்-ல் மொத்தம் 2,60,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் மட்டும் 1,55,000 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.  இந்நிலையில், அங்கு பணியாற்றும் மூத்த ஊழியர்களிடம், 9 மாத சம்பளத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயர்தர வளர்ச்சிக்காக மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி செல்லும் போது இது போன்ற நடவடிக்கைகள் அவசியமாவதாகவும், அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்கள் வெளியேறுவதால் வழக்கமான பணிகளில் எந்த பாதிப்பும் வர வாய்ப்புகள் இல்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இது மிகக் குறைந்த அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைதான் என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.டி. பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர், தமிழக தொழிலாளர் நல ஆணையரிடம் இன்று புகாரளித்துள்ளனர். பணியிலிருந்து திடீரென இப்படி வெளியே அனுப்பும் பட்சத்தில் ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர்கள் இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் எனக் கூறினர்.

ஏற்கனவே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விசா கட்டுப்பாடுகளால் வெளிநாட்டுக் கனவில் இருந்த இந்திய ஐ.டி. ஊழியர்கள் பெரும் பாதிப்படைந்தனர். மேலும், நாட்டின் மூன்றாவது பெரிய ஐ.டி. நிறுவனமான விப்ரோ கடந்த வாரம் 600 பணியாளர்களை வெளியே அனுப்பியது. அடுத்தடுத்த பிரச்சனைகளால் இந்திய ஐ.டி. பணியாளர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஐ.டி நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறிது சிறிதாக இயந்தரமயமாக்கி வருவதால் மேற்கண்ட ஆட்குறைப்பு பிரச்சனைகள் எழுவதாக ஐ.டி துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.