ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டுள்ள அபு சயாப் என்ற தீவிரவாத இயக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் பணத்துக்காக ஆட்களை கடத்துவதும், மிரட்டியும் பணம் கிடைக்காதபோது தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்வதும் வழக்கம். இந்த இயக்கத்தின் மூத்த உறுப்பினராகவும், தளபதியாகவும் திகழ்ந்தவர் அல்ஹாப்சி மிசாயா.
அபு சயாப் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிற சுலு மாகாணத்தில் நேற்று முன்தினம் கடற்படை வீரர்களுடன் நடந்த மோதலின்போது, சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து ராணுவம் கூறுகையில், “ பிலிப்பைன்ஸ் நாட்டில் 15 ஆண்டுகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர், அல்ஹாப்சி மிசாயா. நாட்டின் தென்பகுதியில் ஆட்கடத்தலுக்கு பெயர்போனவர். இப்போது கடற்படையினருடனான மோதலில் கொல்லப்பட்டிருப்பது நல்ல செய்தி” என தெரிவித்தது. அல்ஹாப்சி மிசாயா கொல்லப்பட்டு விட்டது, அபு சயாப் இயக்கத்துக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.