சரண்ராஜ் சாருடன் சரிக்கு சமமாக நின்று திமிராக பேசினேன் – ‘குப்பன்’ பட நாயகி பிரியதர்ஷினி அருணாச்சலம்

600 படங்களுக்கு மேல் நடித்து கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் சரண்ராஜ்.
20 வருடங்களுக்கு முன் தான் நடித்த அண்ணன் தங்கச்சி என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறிய சரண்ராஜ், தற்போது தனது மகன் தேவ் கதாநாயகனாக நடிக்கும் ‘குப்பன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஆதிராம் இன்னொரு நாயகனாக நடிக்க, சுஷ்மிதா மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் சரண்ராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கதாநாயகிகளில் ஒருவரான பிரியதர்ஷினி அருணாச்சலம் கூறும்போது, “இந்தப் படத்திற்காக நான் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, சரண்ராஜ் சாரின் படத்தில் தான் நடிக்க போகிறேன் என்பது தெரியாது. ஆடிசனுக்காக சென்றபோது அவரே என்னிடம் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி விளக்கி கூறியது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. படத்தில் துணிச்சலான பெண்ணாக நடிப்பதால் என்னுடைய வசன உச்சரிப்பு அதற்கேற்ற மாதிரி சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மட்டும் முதலிலேயே கூறிவிட்டார்.

சரண்ராஜ் போன்ற ஜாம்பவான் படத்தில் அதிலும் அவருடன் சேர்ந்து நடிப்பது பெருமையாக இருந்தது. படத்தில் அவருக்கும் எனக்குமான காட்சிகளும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில் அவருடன் சரிக்கு சமமாக நின்று திமிராக பேசுவது போல நடித்தது மறக்க முடியாதது. சரண்ராஜ் சார் சீனியர் என்றாலும் செட்டில் என்னை பொறுத்தவரை ஜாலியாகவே இருந்தேன். என்னை ரொம்பவே சேட்டை செய்பவள் என்று கூட அவர் கிண்டல் அடிப்பார்.

பெரும்பாலான படப்பிடிப்பு கடற்கரையிலேயே நடைபெற்றதால் அங்குள்ள மண்தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் கண்களில் லென்ஸ் அணிந்திருந்ததால் கடற்கரையில் பறக்கும் மண் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை லென்ஸ் மாற்றி நடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தேவ், ஆதி, சுஷ்மிதா என அனைவருமே ஒரே வயதுக்காரர்கள் என்பதால் படப்பிடிப்பின் போது அனைவருமே நட்பாக பழகினோம். நான், தேவ், ஆதி மூவரும் நடித்த ஒரு காட்சியில் அவர்களுடன் பேசும்போது கோபம், அழுகை, அதன்பின் ரிலாக்ஸ் ஆவது என மாறி மாறி உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியில் கிளிசரின் போடாமலேயே நேச்சுரலாக என்னை நடிக்க வைத்தது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

இதற்குமுன், D3, கடைசி காதல் கதை மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் நிற்க அதற்குத் தக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். தேடிவரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல். கதாபாத்திரம் சிறிதோ அல்லது பெரிதோ எதுவானாலும் கதையின் நகர்வுக்கு அது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்கிறார் பிரியதர்ஷினி அருணாச்சலம்.