சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 44-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில், அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது,

”அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும், இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளில் 5200 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை தமிழகம் முழுவதும் குறிப்பாக கடற்கரை பகுதிகள், மலை கிராம பகுதிகள், அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் என்று பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன், அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை பள்ளிகளோட வளர்ச்சிக்கு பொறுப்பேற்க செய்வது போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது.

கூடுதலாக பரிசார்த்த முயற்சியாக ‘அகரம் தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றிய மலை கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளாக நடத்தப்பட்டு வரும் நான்கு தொடக்கப் பள்ளிகள் தேவையின் (முன்னுரிமை) அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அகரம் முன்னாள் மாணவர்கள் தினசரி கற்பித்தல் பணிகளை தொடர்ந்து வருகிறார்கள். தற்போது 30 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.