கடந்த மார்ச் 11 அன்று சௌத் இந்தியன் சினி, டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் இயங்கி வந்த அலுவலக கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இன்று 29-03-2023 புதன்கிழமை, காலை சுமார் 11 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து, நீதிமன்ற ஆணையின்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது 17-04-2023 வரை அவகாசம் அளித்து, காவல்துறையினர் முன்னிலையில் சீலை உடைத்து, கட்டிடத்தை திறந்தனர். சட்டபூர்வ செயல்பாடுகள் பூர்த்தியானதும் டப்பிங் யூனியன் வசம் இடம் மீண்டும் நிரந்தரமாக ஒப்படைக்கப்படும்.
டப்பிங் யூனியன் நிர்வாகிகளான உபதலைவர் திருமதி.கே.மாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.விஜயலட்சுமி, திரு.செபாஸ்டியன், திரு.ப்ரதீப்குமார், திரு.சரவணன், திரு.சதீஷ் நாகராஜ் ஆகியோருடன் பொருளாளர் திருமதி.ஷாஜிதா மற்றும் பொதுச் செயலாளர் திரு. டி.என்.பி.கதிரவன் மற்றும் மேலாளர் திருமதி.அம்மு ஆகியோர் உடன் இருந்தனர்.
“கடந்த காலங்களில் டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் சிலர் செய்த தவறுகளுக்காக அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் நீக்கப்பட்டனர். அதில் பி.ஆர்.கண்ணன் என்பவருக்கு மட்டும் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை உள்ளதால் அவர் இன்னும் உறுப்பினராக உள்ளார். அவர் நீக்கப்பட்டவர்களோடு இணைந்து கொண்டு இன்னும் சிலரை தூண்டி 2014 முதல் டப்பிங் யூனியனுக்கு எதிராகவும் , அதன் தலைவர் “டத்தோ” ராதாரவி அவர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக பல அவதூறுகளை பரப்பி 2018ல் நடந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறி, தேர்தலில் தோற்றார்கள்.
அடுத்து 2020ம் ஆண்டு தேர்தலில் அதை விட மோசமாக தோற்றார்கள். 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் 23 பதவிகளுக்கு போட்டியிட 23 வேட்பாளர்கள் கூட இல்லாமல் வெறும் 11 பேர் மட்டுமே போட்டியிட்டு ஒருவர் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதுதான் அவர்களது தரம் மற்றும் நிலைமை. உண்மை என்றுமே மாறாது. ஆனால் பொய் மாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அவர்களோடு இருந்த பலரே அவர்களை விட்டு விலகி விட்டார்கள்.
நேர்மையாக இருக்க முடியாதவர்கள் குறுக்கு வழியை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தலைவரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எத்தனையோ நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் டப்பிங் பேசி அதில் இருந்து கொடுத்த 5 சதவீதத்தை சிறுக சிறுக சேமித்து அந்த பணத்தில் கட்டிய இந்த கட்டிடத்தை பாதித்துள்ளனர். சிறியதொரு குறையை வைத்து எங்கள் கட்டிடத்தை இடிக்க அவர்களின் தீய முயற்சி இது.
டப்பிங் யூனியன் இருந்த கட்டிடத்திற்கு தடை ஏற்படுத்தலாம், ஆனால் டப்பிங் யூனியனை அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எங்கள் தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் சிறப்பான தலைமையில் இதே இடத்தில் , “டத்தோ ராதாரவி வளாகம்” மீண்டும் சீரியதொரு எழுச்சி பெறும். டப்பிங் யூனியன், தனது உறுப்பினர்களுக்காக தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்படும்,” என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.