பாகிஸ்தானில் இருந்து 400 பக்தர்கள், அஜ்மீர் தர்கா உருஸ் விழாவிற்காக இந்தியா வருகை

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் இறந்ததினம் உருஸ் என்னும் விழாவாக மிக சிறந்த முறையில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இந்து மக்களும் கடைபிடித்து வருகின்றனர். அவ்வகையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க நமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டவர்கள்  மலர்ப் போர்வையை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டின் விழா 805-வது ‘உருஸ்’ கொண்டாட்டமாக தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. உரி தாக்குதலுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சுமுகமான நல்லுறவு இருந்துவந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சார்பில் இந்த தர்காவுக்கு மலர்ப் போர்வைகள் காணிக்கையாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், உரி தாக்குதலுக்கு பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் நடைபெற்ற ‘ஆசியாவின் இதயம்’ என்ற உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை, வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணித்ததால் மாநாடு ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிகழ்வானது இந்தியா மீது பாகிஸ்தான் கொண்டுள்ள கசப்புணர்வை பன்மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்காவில் ஆண்டுதோறும் ஒருவார காலத்துக்கு நடைபெறும் 805-வது ஆண்டு உருஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ள 400 பக்தர்கள் பாகிஸ்தான் அரசின் சார்பில் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ள சால்வையை சமர்ப்பிக்கவுள்ளனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரக அதிகாரிகளுடன் அஜ்மீர் நகரை இன்று வந்தடைந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் இங்குள்ள அரசு பள்ளியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்தப் பள்ளியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அஜ்மீர் மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் ஒருவாரம் இங்கு தங்கியிருந்துவிட்டு வரும் 8ஆம் தேதி பாகிஸ்தானுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.