மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர்.
‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் தலைப்பு ஆக்க்ஷன் என்டர்டெய்னர் ஜானருக்கு பொருத்தமானது. பாலகிருஷ்ணாவின் பெரும்பாலான படங்கள் ‘சிம்ஹா’ என இருந்தால், அந்தத் திரைப்படங்கள் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் படத்தின் தலைப்பும், போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போஸ்டரில் பாலகிருஷ்ணா, உக்ரமான அவதாரத்தில் தோன்றுவது அவரது கதாபாத்திரத்தை சித்தரிக்கிறது. அதிலும் வேட்டி அணிந்த அவரது தோற்றமும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்துடன் மிகப்பெரிய வேட்டைக்காக காத்திருப்பது போல் உணர்த்துவதால், ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதிலும் ‘புலிசேர்லா’ நாலு கிலோ மீட்டர் என்ற மைல் கல் மீது அவர் கால் வைத்து நின்றிருக்கும் தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டருக்கும் அவரது ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ. எஸ். பிரகாஷ் பணியாற்றுகிறார். ராம் – லக்ஷ்மன் சண்டைக் காட்சிகளை அமைக்க, சந்து ரவிபதி தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.
நந்தமுரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 2023 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.