மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே., யாஷின், நடிகைகள் திவ்யா துரைசாமி, ஹேமா இயக்குனர் மணி சேகர், தயாரிப்பாளர் மலர்கொடி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
நடிகர் நிஷாந்த் பேசும்போது,
‘சுமார் 15 நிமிடம் ஓடக் கூடிய குறும்படமாகத் தான் இயக்குனர் எனக்கு காட்டினார். ஐவரில் ஒருவராக நீங்கள் நடிக்க போகிறீர்கள் என்று கூறினார். ஐவரும் ஐந்து விதமான குணங்கள் கொண்டவர்கள். ஒருவன் அமைதியாக இருப்பான், இன்னொருவன் எல்லாவற்றிலும் சரியாக இருப்பான். மற்றொருவன் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவன். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அவர்களுடன் 4 மாத பயணம், சூழ்நிலைக்கேற்றவாறு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. இப்படம் நடிக்கும்வரை எனக்கு ஸ்னூக்கர்ஸ் தெரியாது. இயக்குனர் சொந்தமாக ஸ்னூக்கர் நிலையம் வைத்திருந்தார். அங்கு சென்று ஸ்னூக்கர்ஸ் விளையாட கற்றுக் கொண்டேன்’ என்றார்.
நடிகர் வினோத் பேசும்போது,
‘புதிய குழு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. முதல் முறையாக ஸ்னூக்கர்ஸ் படம் வருகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் இயக்கத்தில் ஒரு ஃபிரேமிலாவது நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது அவருடைய மாணவர் மணி சேகர் ஆக்ஷன் கூறி நடிப்பதில் பெருமையாக இருக்கிறது. சஞ்ஜீவன் படத்தை பத்திரிகையாளர்கள் மூலம் தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் எனவே ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் நன்றி’ என்றார்.
நடிகர் சத்யா என்.ஜே. பேசும்போது,
‘இந்த படம் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வரும் ஸ்னூக்கர் படம். நான் கிரிக்கெட் விளையாடுபவன், ஸ்னூக்கர் பற்றிய முழு படமாக ஆர்வமாக பார்க்க முடியுமா? என்று நினைத்திருந்தேன். ஆனால், இயக்குனர் மிக அழகாக எடுத்திருக்கிறார். ஒரு ஏரியாவில் 5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை சுற்றி நகரும் கதை. நம் எல்லோரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞனராக 13 வருடங்கள் இந்த துறையில் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவு தான்.
முக்கியமாக இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி கூற வேண்டும். தயாரிப்பாளரின் மகன் நிஷாந்த் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆனால், என்னுடைய பையனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தனிப் பாடல், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். நிஷாந்தும் எங்கள் ஐவரில் ஒருவராகவே பழகினார்.
விஜய் சாருக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த துறைக்கு வந்தேன். தெறி படத்தின் வெற்றிவிழாவில், நீ நடிக்க வேண்டும் என்று தானே இந்த துறைக்கு வந்தாய்? என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். என்னை நடிகனாக அங்கீகரித்து நடிக்க போ, என்று முதலில் கூறியது விஜய் சார் தான். அவர் கூறிய வார்த்தை தான் எனக்குள் ஏதோ இருக்கிறது என்று நடிக்கத் தூண்டியது. ஆகையால், விஜய் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் சாரிடம், இந்த தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
நடிகர் யாசின் பேசும்போது,
‘பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்த மாணவன். இது என்னுடைய முதல் படம். அனைவரின் ஆதரவும் தேவை என்று வேண்டுகோள் வைக்கிறேன்’ என்றார்.
திவ்யா துரைசாமி பேசும்போது,
‘செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். என்னை நம்பி இந்த படத்தில் இயக்குனர் மணி சேகர் வாய்ப்பு கொடுத்தார். சஞ்ஜீவன் படத்திற்கு தான் முதலில் கையெழுத்திட்டேன். ஆனால், இப்போது தான் வெளியாகிறது. எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இப்படம் முதல் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் கையெழுத்திடும் போதுதான் தயாரிப்பாளரை பார்த்தேன். அதன்பிறகு இப்போது தான் பார்க்கிறேன். மிகவும் சுதந்திரம் அளிக்கக் கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு தான் ஜெய் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன். ஆனால், அப்படங்கள் முன்பே வெளியாகிவிட்டது. இருப்பினும், சஞ்ஜீவன் படம் என்று எப்போதும் சிறப்பான படம் தான். இந்த துறைக்கு வரும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் தான். அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
நடிகை ஹேமா பேசும்போது,
‘ஒன்றரை வருடத்திற்கு முன்பு இயக்குனர் மணியுடன் குறும்படத்தில் நடித்தேன். பிறகு இந்த படத்திற்கு தொடர்பு கொண்டு சஞ்ஜீவன் படத்தில் நாயகனின் அம்மா கதாபாத்திரம் இருக்கிறது. உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அழைத்தார். இந்த வாய்ப்புக் கொடுத்த மணி சேகருக்கு நன்றி’ என்றார்.
இயக்குனர் மணி சேகர் பேசும்போது,
இது என்னுடைய முதல் படம். சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்ற எதார்த்தத்தை சொல்லும் படமாக ‘சஞ்ஜீவன்` உருவாகி இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் ஸ்னூக்கர் விளையாட்டை மையமாக வைத்துள்ளோம். தென்னிந்தியாவில் முதல் ஸ்னூக்கர் படமாகவும் இந்த படம் வந்துள்ளது. இந்த படத்தில் நடித்த பெரும்பாலானோருக்கு இது முதல்படம். குறிப்பாக என்னை போன்ற பாலு மகேந்திரா சாரின் பட்டறையில் பயிற்சி பெற்றோர் பலரும் கைகோர்த்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் நல்லதொரு பொழுதுபோக்கு படமாகவும், எதார்த்த நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் நல்லதொரு படமாகவும் இருக்கும்’ என்றார்.