கனடாவில் நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாயோன்’ திரைப்படம், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக்கிறது
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள், உலகளவிலான ரசிகர்களை சென்றடைவதுடன், அதற்குரிய வர்த்தகமும், அங்கீகாரமும் கிடைக்கிறது. அந்த வகையில் கனடாவில் உள்ள டொரன்டோ மாநகரில் செப்டம்பர் எட்டாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் இந்தியாவிலிருந்து புராணங்களுக்கான திரைப்பட பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட ‘மாயோன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ஆங்கில மொழி பெயர்ப்புடன் இடம்பெற்ற இந்த திரைப்படத்தை பார்வையிட்ட நடுவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள், தொல் பொருள் ஆய்வு செய்து, தற்காலத்திற்கேற்ற வகையில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்த படத்தின் திரைக்கதையை வியந்து பாராட்டியதுடன், படம் நிறைவடைந்ததும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
‘மாயோன்’ திரைப்படம் தமிழில் வெளியாகி, ஐந்து வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பட குழுவினர் மேலும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்த தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசுகையில், ” மாயோன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களை மகிழ்ச்சி அடைய செய்தது. தற்போது மாயோன் திரைப்படத்திற்கு ‘சிறந்த சர்வதேச திரைப்பட விருதினைப் பெற்றிருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தற்போது ‘மாயோன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியிருக்கும் எங்களுக்கு, இந்த சர்வதேச விருது புது உத்வேகத்தை அளித்திருக்கிறது. டொரன்டோ சர்வதேச திரைப்படவிழாவைத் தொடர்ந்து, ‘மாயோன்’ திரைப்படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் ‘மாயோன்’ தொடர்ந்து சர்வதேச அளவில் கவனமும் வரவேற்பும் பெறும்.”என்றார்.
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகி, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ படத்திற்கு சர்வதேச விழுது கிடைத்திருப்பது, தமிழ் திரை உலகுக்கு ஆரோக்கியமான விசயம் என திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே பகவான் கிருஷ்ணனின் லீலைகளை மையப்படுத்தி, தெலுங்கில் தயாராகி, இந்தியில் வெளியிடப்பட்ட ‘கார்த்திகேயா 2’ படம் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், ‘மாயோன்’ படத்தையும் இந்தியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.