புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள படம் நாட் ரீச்சபிள்

Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது…
இந்த திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது மேக்கிங் பற்றி தெரியவந்தது. அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒரு விழாவாக எடுத்து செய்ததே பெரிய விஷயம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க எனது குழு தான் மிக முக்கிய காரணம். இப்படத்தின் இசையமைப்பாளருக்கு இது தான் முதல் படம், எதிர்காலத்தில் அவர் சிறந்த இசையமைப்பாளராக வருவார். படத்தில் அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். நடிகர் விஷ்வா, சாய் தன்யா, சுபா அனைவருக்கும் நன்றி. கேமராமேன் மிகக்குறைந்த லைட்டை வைத்து அட்டகாசமாக நான் கேட்டதை எடுத்து தந்தார். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது…
எனது முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆடியோ லாஞ்ச் நடப்பது சந்தோசம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இந்த படத்திற்கு ஒரு பாடல் தான் இருந்தது, பின்னர் நாங்கள் கலந்துரையாடி படத்தை ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு போக மேலும் சில பாடல்களை இணைத்துள்ளோம். அதுபோக ஒரு பாடலை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளோம். அந்த பாடல் படத்தின் கதையை முழுதாய் கூறும் படி இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஷ்வா பேசியதாவது…
இந்த படத்தின் இயக்குநர் மிகவும் திறமை வாய்ந்தவர், அவருடைய ஐடியாக்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பு மூலம் படத்தை மெருகேற்றியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.

நடிகை சுபா பேசியதாவது..
இந்த திரைப்படம் இயக்குநர், இசையமைப்பாளருக்கு முதல் படம், ஆனால் படம் அப்படி இருக்காது. நேர்த்தியான ஒரு படமாக இருக்கும். நான் இங்கு இருப்பதற்கு என் அம்மா தான் காரணம் அவருக்கு நன்றி. நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் இருந்து, இப்போது வரை மக்கள் மனதில் எப்படியாவது பதிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நிறைய சின்ன கதாபாத்திரங்களை கூட எடுத்து நடித்து வருகிறேன். ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இங்கு எங்களை வாழ்த்த வந்த பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் திரை விமர்சகர் கேபிள் சங்கர் பேசியதாவது…
கோயம்புத்தூரில் இருந்து வந்து, ஒரு புது டீம் படம் செய்துள்ளார்கள். இப்போது கோயம்புத்தூரிலிருந்து நிறைய பேர் படம் செய்கிறார்கள் வாழ்த்துக்கள். ஒரு புது படத்தை வியாபாரம் செய்வது இன்றைய நிலையில் மிக கடினமான பணியாக இருக்கிறது. நானும் ஒரு ஒடிடியில் பணியாற்றுகிறவன் என்பதால், டிஜிட்டல் மார்க்கெட் பற்றி தெரியும். சின்ன படங்கள் வியாபாரம் ஆவது கஷ்டம், மக்கள் படம் பார்க்க தயாராக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம். தியேட்டரில் படத்தை நிறுத்தி வைப்பது முடியாத காரியம். அதனால் இன்றைய காலத்தில் படத்தை எங்கெல்லாம் கொண்டு சேர்க்க முடியுமோ அதை சேர்த்து விட வேண்டும். புது ஆட்கள் எனில் படத்தை பற்றி பலவிதமாக சொல்லி படத்தை திரையரங்கில் வாங்க மறுப்பார்கள். ஒரே நேரத்தில் பல ஓடிடியில் ஒளிபரப்பும் வசதி இன்று இருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். எதிர்காலத்தில் டிஜிட்டலில் நிறைய கண்டண்ட் தேவைப்படுகிறது, உங்கள் படத்தின் உரிமையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு பலனளிக்கும். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் கார்த்திக் பேசியது…
நாட் ரீச்சபிள் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தின் டீசர் நன்றாக இருந்தது. பாடல் நன்றாக இருந்தது. இந்த டீமிற்கு இது முதல் படம், எனது முதல் படமான பீச்சாங்கை படத்திற்கு இங்கு தான் பிரஸ் மீட் நடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு பதட்டம் இருக்கும் என எனக்கு தெரியும். இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பது மீடியா, உங்கள் கையில் இருக்கிறது. கோடி ரூபாய் போட்டு பாட்டு எடுக்க எங்களிடம் பணம் இல்லை, எங்களிடம் திறமை இருக்கிறது. ஆனால் திறமைக்கு இங்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு தந்தவர்கள் புது தயாரிப்பளர்கள், இப்போது அந்த நிலை இல்லை. நல்ல படம் நாங்க ரெடி, மக்கள் பாக்க ரெடி ஆனால் நடுவில் ஏதோ ஒன்று மிஸ்ஸாகிறது அது என்னவென்று தெரியவில்லை. நல்ல படம் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதை சின்ன படங்கள் தான் நிரூபித்தது. நம்பிக்கை தந்தது அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருக்கிறோம். அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என் வாழ்த்துகிறேன் நன்றி.

இயக்குநர் அருண்காந்த் பேசியதாவது…
கோயம்புத்தூரிலிருந்து நிறைய கனவுகளோடு வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வீட்டுக்கு வருபவர்களை உபசரிப்பது போல் இந்த திரைத்துறைக்கு வரும் புதியவர்களை வரவேற்க வேண்டும். சமீபமாக சின்ன படம் ஓடாது சின்ன படம் எடுக்காதீர்கள் என ஒரு நெகட்டிவிடி பரவுகிறது. இதை சொல்பவர்கள் சின்ன படம் எடுப்பதில்லை. அதனால் நீங்கள் அதை சொல்லாதீர்கள். சின்ன படம் தான் சினிமாவை வளர்க்கும். சின்ன படங்களுக்கு மீடியா ஆதரவு தாருங்கள். இந்தப்படத்தை பற்றி எழுதுங்கள். இப்படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் நடிகர் பிரவீன் பேசியதாவது…
என் படத்தின் பிரஸ் மீட் இங்கு தான் நடந்தது. இப்போது என் நண்பர்களின் படம் இங்கு நடப்பதை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது படம் எடுப்பதை விட படத்தை விளம்பரப்படுத்தவும், ரிலீஸ் செய்யவும் ஒரு தொகை தேவைப்படுகிறது. அதை புரிந்து கொள்ளாமல் தான் நாம் தவறு செய்கிறோம் என்று நினைக்கிறேன். சின்ன படத்தை ரிலீஸ் செய்ய தொகை ரெடி செய்து கொண்டு படத்தை எடுங்கள். படத்தை மார்க்கெட் செய்வது மிக முக்கியம். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள் இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன் நன்றி.

தொழில் நுட்ப குழுவினர் விபரம்

பேனர்: Crackbrain Productions & M Creations
எழுத்து – எடிட்டிங் & இயக்கம்: சந்துரு முருகானந்தம்
நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ்
ஒளிப்பதிவு : சுகுமாரன் சுந்தர்
இசையமைப்பாளர்: சரண் குமார்
ஒலி வடிவமைப்பு: விக்னேஷ் பாஸ்கரன்
கலை இயக்குனர்: ஜெகதீஷ்
VFX: ஹரிகரன்.K, சந்துரு முருகானந்தம்
DI: பயர்பாக்ஸ் ஸ்டுடியோஸ்
வண்ணக்கலவை : ஸ்ரீகாந்த் ரகு
ஒப்பனை: பெர்சி அலெக்ஸ்
பாடல் வரிகள்: உடுமலை பிரவின், M.C.விக்கி, தி மாங்க்
தயாரிப்பு: Crackbrain Productions
மக்கள் தொடர்பு : பரணி அழகிரி, திருமுருகன்.