நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம்.
தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்”
நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையில், பல கண்ணியமான மனிதர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.
தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.
“தி பீப்பிள் மீடியா பேக்டரி” என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் டி.ஜி.விஷ்வபிரசாத். அவருடன் இணைந்து இதைத் தயாரித்திருப்பவர் விவேக் குச்சிபோட்லா.
இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி. சாணக்யா. படத்தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு செய்திருப்பவர் இரமேஷ் தமிழ்மணி.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் இதில் நடித்துள்ளனர்.
தமிழில் நேரடியாக வெளியாகவிருக்கும் இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கிறது.