நடிகனாக ஜெயிப்பதே லட்சியம்! – ’ஓங்காரம்’ பட நாயகன் ஸ்ரீதர்

நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் கோடம்பாக்கத்திற்குள் பலர் நுழைவதுண்டு. ஆனால், அவர்களில் ஜெயித்து மக்கள் மனதில் நுழைவது என்னவோ ஒரு சிலர்
மட்டுமே. கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் மட்டும் போதாது, சினிமாவை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும், என்று கூறுவதுண்டு.
அப்படி ஒருவராக தமிழ் சினிமாவில் நடிகராக வளர்ந்து வருகிறார் ஸ்ரீதர்.

ஸ்ரீதருக்கு பள்ளி காலத்திலேயே நடிப்பு மீது ஆர்வம் வர, அன்று முதல் ஒரு நடிகனாக தன்னை தயார்ப்படுத்தி வந்தவர், கூத்துபட்டறையில்
சேர்ந்து நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். கூத்துப்பட்டறை பயிற்சி முடிந்தவுடன் ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக
அறிமுகமான ஸ்ரீதர், தனது நடிப்பு மூலம் பாராட்டு பெற்றதோடு, மலேசியாவில் தயாரான ‘குறி தி டிராப்’ (Kuri The Drop) என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பும் பெற்றார். அப்படத்தை முடித்தவர் தமிழில் ‘ஷாட் கட்’ என்ற படத்தில் நடித்தார்.

பல சர்வதேசா திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘ஷாட் கட்’ படம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றது.
இதன் மூலம் ஸ்ரீதர் சர்வதேச அளவில் அறியப்பட்டார். கனடா தமிழ் ரசிகர்களிடமும், மலேசிய ரசிகர்களிடமும் பிரபலமான நடிகராக உயர்ந்த ஸ்ரீதர், ’மின்மினி’,
‘இட்டது பட் ஆனால் வாட் என்ன’, ‘ஓங்காரம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார்.

’ஷாட் கட்’ திரைப்படம் கனடா நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றதை தொடர்ந்து அந்நாட்டு தமிழர்களிடம் பிரபலமடைந்த ஸ்ரீதருக்கு
தற்போது கனடா நாட்டு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதேபோல், பிரெஞ்சு நாட்டில் உருவாகும் சர்வதேச திரைப்படம் ஒன்றிலும்
நாயகனாக நடிக்க உள்ளார்.

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகரானாலும் தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும், என்ற லட்சியத்தோடு பயணிக்கும் ஸ்ரீதர், நல்ல வாய்ப்புகளுக்காக
காத்துக்கொண்டிருப்பதை விட, வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் சினிமா தொழில்நுட்பம் மற்றும்
திரைப்பட இயக்கம் படித்தவர், பூனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்.

நடிப்போடு நின்றுவிடாமல் சினிமா தொழில் நுட்பங்களையும் கற்றுத்தேர்ந்த ஸ்ரீதர், சொந்தமாக கேமரா யூனிட் ஒன்றை ஆரம்பித்ததோடு, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட ஒரு திரைப்படம் உருவாவதற்கான அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இப்படி சினிமாவில் பல துறைகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும் அவை அனைத்துமே தன்னை ஒரு நல்ல நடிகனாக நிலைநிறுத்தும் முயற்சியே என்று கூறும்
ஸ்ரீதரிடம் தற்போது பல இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

வாய்ப்புகள் பல வந்தாலும், நல்ல வேடங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதர், நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ஷாட் கட்’ மற்றும் ‘ஓங்காரம்’ ஆகிய
திரைப்படங்கள் வெளியானால் அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராவது உறுதி!