சட்டசபை மரபை மீறி செயல்பட்டதால் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழக சட்டமன்ற நூற்றாண்டுக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன. பெருமைமிக்க சபாநாயகர்கள் இந்த சபையை அலங்கரித்தார்கள். இந்த சபையில் பேரவை தலைவர் பொறுப்பேற்றபோது, அப்போது அவை முன்னவராக இருந்த ஒ.பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான் அவரை இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தோம்.

அவர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பேசினோம். ராஜாஜி போன்றவர்கள் அலங்கரித்த சபை இது. ராஜாராம் சபாநாயகராக இருந்தபோது அமைச்சருக்கு எதிராகவே கருத்து தெரிவித்தார். சபாநாயகர் பற்றி அண்ணா கருத்து கூறும் போது, “சட்டமன்ற சபாநாயகர் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். புகழ்பெற்ற இந்த பேரவையில் சபாநாயகருக்கு எதிராக இதுபோன்ற நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது உண்மையிலேயே எனக்கு வருத்தம் தான்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதை பயன்படுத்தி கொள்ள சபாநாயகர் தவறி விட்டார். சபாநாயகர் மீது தனிப்பட்ட முறையில் எந்தவொரு விருப்பும், வெறுப்பும் எங்களுக்கு இல்லை. அவர் நடந்து கொண்ட விதத்தில்தான் இதுப்போன்ற தீர்மானத்தை கொண்டு வர அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இதை டிவிசன் முறையில் நிறைவேற்ற வேண்டும். சபாநாயகருக்கு பல்வேறு அதிகாரங்கள் உள்ளன.

அவ்வளவு அதிகாரங்கள் இருந்தும் மரபுகளை கடைபிடிக்க தவறிவிட்டார். தி.மு.க. மீது அவதூறுகளை கூறும்போது, அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஆளுங்கட்சி பற்றி பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இந்த 15வது சட்டமன்ற பேரவையில் 20.6.2016 அன்று ராஜன் செல்லப்பா தி.மு.க. குறித்து அவதூறாக பேசினார். அதை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுத்து விட்டார். 25.7.2016 அன்று கலைஞர் பெயரை குறிப்பிட்டு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அதை நீக்க மறுத்து விட்டார்.

ஆனால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பெயரை சொல்லி பேசியபோது அதை நீக்கிவிட்டார். 29.7.2016 அன்று எதிர்க்கட்சி பற்றி தவறாக பேசிய பேச்சையும் நீக்க மறுத்து விட்டார். அதேபோல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பற்றி கூறியதை உடனே நீக்க செய்தார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாகவே நடந்து கொள்கிறார். காவிரி பிரச்சனை பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது தி.மு.க. உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்கம் செய்து தி.மு.க. உறுப்பினர்கள் அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாமல் செய்தார்.

இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் அவரது அணுகுமுறை ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்தது. 18.2.2017 அன்று ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது நாங்கள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டோம். பல்வேறு மாநிலங்களில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. சபாநாயகர் எதையும் ஏற்கவில்லை.  அன்று தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி போலீசாரை வைத்து எங்களை தாக்கினார்கள்.

அவை மரபையும் ஜனநாயக மரபையும்  மீறி அவர் நடந்து கொண்டார். மக்கள் விருப்பத்தைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம். தனிப்பட்ட முறையில் சபாநாயகர் மீது எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நாங்கள் நடந்து கொண்டதாக கூறியது வருத்தம் அளிக்கிறது. அவர் நடுநிலை தவறி நடந்து கொண்டதால் தான் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.