2016 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் பி.வி.சிந்து

 

 

2016ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார். பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இதில், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த பேட்மிண்டன் வீரருக்கான விருதை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும், விராட் கோஹ்லிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாக்கி வீரர் அஜித் பால் சிங்கும், மல்யுத்தப் பிரிவில் சிறந்த நபருக்கான விருதை ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கும் வென்றுள்ளனர். ஜிம்னாஸ்டிக் பிரிவில் சிறந்த வீரருக்கான விருதை, தீபா கர்மகரும், சிறந்த பாக்ஸருக்கான விருதை விகாஷ் கிருஷ்ணனும் வென்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாக்ஸருக்கான விருது, விஜேந்தர் சிங் பெற்றுள்ளார்.

சிறந்த பயிற்சியாளருக்கான விருது, சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் பிஸ்வேஷர் நந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தீபா மாலிக், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, வருண்சிங் பாட்டி ஆகியோருக்கு பாரா ஒலிம்பிக் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த அணிக்கான விருது, ஜூனியர் ஹாக்கி அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.