10 தமிழக மீனவர்களை இலங்கையில் இருந்து உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை, முதல்வர் பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்ட 10 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு இன்று அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில், ”ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் ஒரு இயந்திர படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன்துறைக்கு கொண்டுசென்றுள்ள சம்பவத்தை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன். கடந்த 6ஆம் தேதி அன்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் ஆறுவதற்குள் இந்த சிறைபிடிப்பு சம்பவம் நடந்துள்ளது. பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 85 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட போதும் தற்போது மீண்டும் ஒரு கைது சம்பவம் அரங்கேறியுள்ளது.

மிகுந்த வேதனை நிறைந்த தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ராஜாங்க ரீதியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மீது இலங்கை கடற்படையினருக்கு கொஞ்சம்கூட அக்கறை இல்லாததையே கைது சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. பாக்ஜலசந்திப் பகுதியில் மீன்பிடிக்கும் அப்பாவி தமிழக மீனவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மீன்வள ஆதாரங்களை இரு நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதற்கு உலக அளவில் ராஜாங்கரீதியில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருப்பதை ஏற்கெனவே நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் சிறைபிடிப்பு மற்றும் கைது சம்பவங்கள் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்படும் ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை தடுக்க முயற்சிப்பது போல் தோன்றுகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் சிறைபிடிக்கப்படுவதை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பாக்ஜலசந்திப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பது தற்போது அவசர தேவையாக உள்ளது. இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்க்க வகைசெய்த 1974-இந்திய-இலங்கை ஒப்பந்தம் அரசியல் சாசனப்படி ஏற்புடையதா என்பதை எதிர்த்து எங்கள் கட்சியின் தலைவர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைந்துகொண்டது. நான் தங்களிடம் கோரியிருந்த ஒருங்கிணைந்த சிறப்பு திட்ட நிதி ரூ.1,650 கோடியை வழங்க விரைவாக ஒப்புதல் அளிப்பது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பெரிதும் உதவும். இலங்கை அரசின்வசம் உள்ள 128 மீன்பிடி படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவை மிகவும் பரிதாபமான முறையில் இலங்கை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் அந்த மீன்பிடி படகுகளுக்கு சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கும்.

சேதங்கள் சரிசெய்து பயன்படுத்தக்கூடிய நிலையில் அந்த படகுகள் திருப்பியளிக்கப்பட வேண்டும். இலங்கை அரசு அந்த படகுகளை விடுவிக்காமல் செய்து வரும் உத்தியால் தமிழக மீனவர்கள் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். நீண்ட காலமாக நிலவி வரும் முக்கியமான தமிழக மீனவர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டியது தற்போதைய அவசர தேவை ஆகும். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 10 தமிழக மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகையும், ஏற்கெனவே இலங்கை வசம் உள்ள 129 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு ராஜாங்க ரீதியில் உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு தாங்கள் உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.