இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லையெனில் ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட மாட்டார் என தகவல் பரவியதால் சசிகலா அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்கின. ஆனால் சசிகலா அதிமுக மட்டும் விருப்ப மனுவை வாங்கவில்லை. ஓபிஎஸ் அதிமுகவில் கூட முன்னாள் டிஜிபி திலகவதி உள்ளிட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் சொந்த குடும்ப கட்சியாக நினைக்கும் சசி கோஷ்டி யாரிடமும் விருப்பமனு வாங்கவில்லை.
அதேநேரத்தில் சசிகலா முன்னர் உறுதியளித்தபடி, எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் (கொலை செய்யப்பட்ட எம்ஜிஆர் விஜயன் மனைவி) தாமே வலியப் போய் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தார். இதனால் அவர்தான் வேட்பாளரோ என அதிமுக நிர்வாகிகள் கருதியிருந்தனர். ஆனால் ஆட்சி மன்றக் குழு கூடிய பின்னர் தம்மை வேட்பாளராக அறிவிக்குமாறு தினகரன் கறாராக கூறிவிட்டார். இதனால் தினகரனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தினகரனைப் பொறுத்தவரையில் சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் உதவியுடன் எப்படியும் இரட்டை இலையை மீட்டுவிடலாம் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கைதான் காரணம். இதனால்தான் இப்போதும் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என கூறி வருகிறார். இன்றுகூட சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த தினகரன், நான் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக கூறினார். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் போட்டியிடமாட்டோரோ? என்ற சந்தேகத்தை எழுப்பினர்.
இந்த சந்தேகம் காட்டுத் தீயாக சசிகலா அதிமுகவில் பரவ பரபரப்பு ஏற்பட்டது. இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் சுதா விஜயகுமாரையே கூட சசிகலா அதிமுக வேட்பாளராக நிறுத்தலாம்; அதற்கு தம் மீது வழக்குகள் இருக்கின்றன என ஒரு காரணத்தை தினகரன் அடித்துவிடலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.