ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் அஸ்வினை முந்திச் சென்று முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களைச் சாய்த்ததன் மூலம் இதைச் சாதித்துள்ளார் ஜடேஜா. இதுவரை இவரும், அஸ்வினும் இணைந்து முதலிடத்தில் இருந்தனர். தற்போது அஸ்வினை பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஜடேஜா. ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5, 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.
இந்தப் போட்டியின் இறுதியில் அவர் தனித்து முதலிடத்தைப் பெற்றார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தைப் பிடித்தவர்களில் 3வது வீரர் ஜடேஜா. இதற்கு முன்பு பிஷன் சிங் பேடியும், அஸ்வினும் இந்த சாதனையைச் செய்துள்ளனர். ஜடேஜா தற்போது 899 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது ஆர். அஸ்வின் இருக்கிறார். அவருக்கு தரவரிசையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தரிவரிசைப் பட்டியலில் 37 புள்ளிகள் சரிந்து 862 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின்.
ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு 2 விக்கெட் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 3வது இடத்திலும் ஒரு சுழற்பந்து வீச்சாளரே இருக்கிறார். அவர் இலங்கை வீரர் ரங்கண ஹெராத். 4வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட் இருக்கிறார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5வது இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 6வது இடத்திலும் உள்ளனர். டேல் ஸ்டெயிலும் பிராடுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.