பா.ஜ.க. அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கபட்டியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் வைகோ மற்றும் அவரது தாயார் மாரியம்மாள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அந்த மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கலிங்கபட்டியில் உள்ள மதுக்கடையை மூட உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தியும் கலிங்கப்பட்டியில் இன்று மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணிக்கு வைகோ தலைமை தாங்கினார். இந்த பேரணியில் கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி முடிவில் வைகோ சிறப்புரையாற்றினார். மதுக்கடையை மூடக்கோரி கலிங்கப்பட்டி பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்தியாவிற்கே முன் உதாரணமாக அமைந்து விட்டது. பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொண்டு கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூட மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. எனினும் பஞ்சாயத்திற்கு ஆதரவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இது எனது தாயார் மாரியம்மாளுக்கு கிடைத்த வெற்றியாகும். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் கோரிக்கையை ஏற்று எனது தாயார் மாரியம்மாள் நினைவாக கலிங்கப்பட்டியில் வெண்கல சிலை நிறுவப்படும். இலங்கையில் நடந்த தமிழர்கள் மீதான போர் குற்றத்திற்கு எதிராக நாளை ஜெனிவாவில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரிட்டனும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த ஓட்டெடுப்பின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு ஆதரவு அளித்தது.  தற்போதைய பா.ஜ.க. அரசு நாளை நடைபெறும் ஓட்டெடுப்பில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மீதான போர்க்குற்றத்தை மூடி மறைத்த மோடி அரசு என குற்றம் சாட்டுவேன். இவ்வாறு அவர் பேசினார்.