தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர். சாம் பால் மனு அளித்தார்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை மாற்றி, தமிழகத்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினத்தவர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் சாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சமூக நீதியைக் காக்க முடியும் என வலியுறுத்தி, சென்னை வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலமத்தில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
பாமக மாநில துணை பொதுச் செயலாளர் தி.இரா.சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் பங்கேற்று சாதி வாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாமக மாநில துணைத் தலைவர் முனைவர். சாம் பால், வேளச்சேரி வட்டாட்சியர் ஜி.ஆர்.துளசி ராம்ராஜ் அவர்களிடம், தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக் கோரிய மனுவை அளித்தார்.