மத்திய அரசுக்கு கணக்கில் வராத பணம் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய்

ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, மத்திய அரசுக்கு கணக்கில் வராத பணம் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளதாக கறுப்பு பணம் குறித்து விசாரணைநடத்தும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம்தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. தொடர்ந்து கணக்கில் வராத பணம் வைத்துள்ளவர்களுக்காக, அதை அரசிடம் தெரிவிக்க சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலில் 60 சதவீதமாக இருந்த அபராதம் பின்னர் 75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கறுப்பு பணம் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத்தலைவர் அரிஜித் பாசாயத் கூறுகையில், மத்திய அரசின் சிறப்பு திட்டம் மூலம் கணக்கில் வராத பணம் மூலம், வரியாக ரூ.6000 கோடி வசூலாகியுள்ளது.

தங்களது வங்கிக்கணக்கு, மற்றவர்கள் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் செலுத்தியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் மேல் டிபாசிட் செய்த ஏராளமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு,1092 பேர் இன்னும் பதிலளிக்கவில்லை. ஜன்தன் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் டிபாசிட் செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதிகளவு பணம் டிபாசிட் செய்தவர்கள், அந்த பணம் வந்ததற்கான வழியையும் தெரிவிக்க வேண்டும். வங்கியில் அதிகளவு பணம் டிபாசிட் செய்த அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஒடிசாவில் வனத்துறை அதிகாரி ஒருவர் ரூ.2.5 கோடி டிபாசிட் செய்துள்ளார். இந்த பணத்திற்கு அவர் எப்படி கணக்கு காட்ட முடியும்? இது கணக்கில் வராத பணமாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.