கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா

திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பது மிகவும் குறைவு. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் வெளியாகும் போது பலரும் ஆச்சரியத்தை அளிக்கும். அப்படித்தான் சந்தீப் கிஷன் – இயக்குநர் சினிஷ் இருவரின் நட்பு. இருவருமே எந்தவொரு படத்திலும் இணைந்து பணிபுரியவில்லை என்றாலும் நெருங்கிய நண்பர்களாவே இருந்து வருகிறார்கள்.

அந்த நட்பு இப்போது திரையில் எதிரொலிக்கவுள்ளது. ஆம், இருவரது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கவுள்ளனர். ‘வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சந்தீப் கிஷன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ‘கண்ணாடி’ படத்தின் தெலுங்கு பதிப்பை தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நட்பே துணை’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ படத்தை தயாரித்து வருகிறார்.

‘பலூன்’ படத்துக்குப் பிறகு ‘சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் இயக்குநர் சினிஷ். தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறார். பெரும் எதிர்ப்பில் உள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படம் இவருடைய தயாரிப்பு தான். அதனை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்க வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ் – சோல்ஜ்சர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘விவாஹ போஜனம்பு’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் டைட்டில் லுக் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராம் அப்பாராஜூ இயக்கவுள்ள இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. முழுக்க யதார்த்த வாழ்க்கையைச் சொல்லும் திருமண நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு திருமண காமெடி கலாட்டா தயார் என்பதை உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்..