கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா வாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேட்சைகள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரா வாடி கோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து கவர்னர் மிர்துளா சின்காவை மனோகர் பாரிக்கர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் கொடுத்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டு மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சட்டசபையில் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கோவா முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் இன்று மாலை பதவி ஏற்பார் என்றும் அவருடன் மேலும் 8 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. கோவா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருப்பதையொட்டி மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் வகித்த ராணுவ இலாகா நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க கவர்னர் மிர்துளா சின்கா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காங்கிரசுக்கு சரமாரியாக கேள்விகள் விடுத்தனர். “உங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை எத்தனை பேர்? உங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் கவர்னர் மாளிகை முன் தர்ணா கூட நடத்தலாம். உங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை அளிக்கலாமே” என்றனர். தொடர்ந்து மனோகர் பாரிக்கர் பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்றும் அவர் வரும் 16-ம் தேதி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், கோவா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் மத்திய மந்திரி திக் விஜய் சிங்குடன் இன்று பிற்பகல் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில், கோவாவில் புதிய அரசு உருவாக்க உரிமை கோரும் வகையில் ஆதரவு அளிப்பவர்களுடன் சேர்த்து எங்களிடம் 21-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வரும் 16-ஆம் தேதி சட்டசபையில் எங்களது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம். இதில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கோவா பா.ஜ.க. தலைவர் சதானந்த தனாவாடே இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.