விரக்தியில் விராட் கோலி

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் விராட் கோலி 0, 13 ரன்னும், 2-வது டெஸ்டில் 12, 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2-வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் இந்திய வீரர்கள் குறிக்கோளாக இருந்தனர். குறிப்பாக விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதில் இருந்து, இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வரை பம்பரமாக செயல்பட்டு கொண்டிருந்தார். ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தும்போது ரசிகர்கள் பார்த்து ஆதரவு குரலை எழுப்புங்கள் என்று கெட்டுக்கொண்டார். இறுதியாக ஸ்மித் டி.ஆர்.எஸ். பிரச்சினையில் பெரிய பூகம்பமே வெடித்தது.

அதில் இருந்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள், முன்னாள் வீரர்கள் கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கோலி ரன் குவிக்க முடியாததால் விரக்தியில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மிட்செல் ஜான்சன் கூறுகையில் ‘‘விராட் கோலி எப்போதும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். ஆனால் அவர் தற்போது விரக்தியில் உள்ளார். ஏனென்றால், தன்னால் ரன்கள் குவிக்க முடியவில்லை என்பதால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக தன்னுடைய ஆக்ரோஷத்தை விடாமல் சென்று கொண்டிருக்கிறார். பெங்களூரு டெஸ்டில் பாதி நாட்களுக்குப் பிறகு ஆக்ரோஷம் தலைவிரித்து ஆடியது. இது இந்தியாவின் வெற்றிக்கு அதிக அளவில் ஒத்துப்போனது. ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் ஆகும்போதெல்லாம் கோலியின் முகபாவனையை படம்பிடிக்க கேமரா அவர் அருகில் சென்றது.

ஏனென்றால் விக்கெட் விழும்போதெல்லாம் அவர் ஆக்ரோஷமாக தனது முகபாவனையை வெளிப்படுத்துவார் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு வீரரையும் அவர் தனக்கே உரிய முறையில் வழியனுப்புகிறார். இதில் அவர் கவனமாக இருப்பது நல்லது. இவ்வாறு சில வேளைகளில் நடக்கும் ஆனால் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், அவர் துள்ளிக்குதித்து தனது முகபாவனை, வார்த்தைகள் மூலம் வீரர்களை வழியனுப்புவது எச்சரிக்கைக்குரியது. பெங்களூரு டெஸ்டில் அவரின் செயல்பாடுகள், நான் விளையாடிய போது சில விஷயங்களை நினைவூட்டுகிறது. எனக்கும் விராட் கோலிக்கும் இடையே சில உரசல்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை நாங்கள் இருவரும் ஆடும் போதும் உரசல் ஏற்பட்டது. 

2014ஆம் ஆண்டு பாக்சிங் தின டெஸ்ட் போட்டிக்குப் பிறகே அவர் என்னைப்பற்றி அதிகம் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அந்த போட்டியின் முடிவில் என் மீது அவருக்கு மதிப்பில்லை என்று தெரிவித்தார். அதற்குக் காரணம் அன்றைய தினம் ஒரு பந்தை அவர் தடுத்தாடியபோது நான் அதை எடுத்து அவர் நின்ற திசையில் ஸ்டம்பை நோக்கி வீசினேன். அப்போது விராட் கிரீஸிற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது பந்து அவர் முதுகில் பட்டது. உடனேயே நான் மன்னிப்பு கேட்டேன். அது ஒரு விபத்து, ஆனால் எனது மன்னிப்பு அவர் காதுகளுக்கு எட்டவில்லை. நிறைய வார்த்தைப் பரிமாற்றங்கள். அங்கிருந்து விராட் நிறுத்தவில்லை’’ என்றார்.