சசிகலாவை எதிர்க்கும் நடிகர் கமலுக்கு நாஞ்சில் சம்பத் திடீர் புகழாரம்

அதிமுகவை கபளீகரம் செய்த சசிகலா கோஷ்டியை மிக கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசனை சசிகலா அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திடீரென புகழ்ந்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் சசிகலாவை மிகக் கடுமையாக மறைமுகமாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கமல் நற்பணி மன்றத்தினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமது ரசிகர்கள் பாதுகாப்புக்காக குழுக்களை அமித்துள்ளார் நடிகர் கமல்.

இதனிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதற்கு சசிகலா அதிமுகவின் வைகைச் செல்வன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

நாஞ்சில் சம்பத்தின் பதிவு, புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப்பரீட்சையில் நிரந்தர இளைஞன் என் நெஞ்சம் நிறைந்த கலைஞன் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிகர் கமலஹாசன் நேற்று திராவிட இயக்கம் குறித்து சிலாகித்து பேசியது எனக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட இயக்கம் இருக்கும். திராவிட இயக்கம் என்பது பூகோள ரீதியிலானது என்று அவர் சொன்னது செவியில் தேனாய் விழுந்தது.

அவருடைய பரந்த பட்டறிவும் நிரம்பியநூல் அறிவும்தான் அவர் இப்படி கருத்து சொல்வதற்கு காரணம். மனோன்மணியம் தந்த பேராசிரியர் டாக்டர். சுந்தரம் பிள்ளையின் படைப்புகளை கமலஹாசன் ஆழ்ந்து வாசித்தாலும் அது குறித்து நீளயோசித்ததனாலும் இந்த கருத்தை வெளிபடுத்தியிருக்கிறார். திராவிட இயக்கம் என்பது காலத்தீயில் கருகிப் போகாத தத்துவம்…அதன் பரிணாமத்தை வெளிப்படுத்திய நடிகர் கமலஹாசனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் திராவிட இயக்க மாட்சியை வியந்து பேசிவருகிற நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளார்.