பதினைந்து வருட கால ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை சேவையை  சுவிட்சர்லாந்தின்  இளவரசி பிராங்கோயிஸ் ஸ்டுர்ட்சாவுடன் கொண்டாடினர்

ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை தனது 15 வது ஆண்டினைக்  கொண்டாடுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நிறுவப்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமான ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை 2005 முதல் இந்தியாவில் அரசுப் பள்ளிகளையும், பெண்களுக்கான தொழில்முறை பயிற்சி மையங்களையும் கவனித்து வருகிறது.

 
ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளையின் தலைவரான பிரின்சஸ் பிராங்கோயிஸ் ஸ்டுர்ட்சா, மற்றும் துணைத் தலைவரான அவரது மகள் பிரின்சஸ் கிறிஸ்டின் ஸ்டுர்ட்சா ஆகியோர் இந்தியாவில் அவர்கள் செய்த 15 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் வண்ணம் பள்ளிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி என்பதுதான் ஹார்ட் ஃபார் இந்தியாவின் தினசரி வேலையை பிரதிபலிக்கிறது.  2005 ஆம் ஆண்டு முதல், படிப்படியாக வளர்ந்து, கல்வியை ஊட்டச்சத்துடன் இணைத்து, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்கிறது.

நல்ல ஆசிரியர்கள், கல்விக்கான கணினிகள், சுகாதாரத்திற்கான கழிப்பறைகள், பாதுகாப்பிற்கான  சுற்றுச்சுவர், ஊட்டச்சத்து மிக்க காலை உணவு மற்றும் திண்பண்டங்கள், புத்தகங்கள், காலணிகள், துப்புரவு உதவியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு கிருமிநாசினிகள், ஊட்டச்சத்து உதவியாளர்கள், சமையல்காரர்கள் என ஒவ்வொரு பள்ளியின் தேவைக்கேற்ப ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை பல ஆண்டுகளாக உதவிகளை செய்து வருகிறது.

2005 ஆம் ஆண்டில் ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை முதன்முதலில் தனது சேவையை தொடங்கிய, நன்மங்கலத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பிராங்கோயிஸ் கலந்து கொண்டார். தற்போது கோவிலம்பாக்கம், அம்மான் நகர், பெருங்குடி மற்றும் கரப்பாக்கம் போன்ற பல்வேறு அரசு பள்ளிகளுக்கும் தனது சேவையை ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், 5 பால்வாடிகளையும்  கவனித்து வருகிறது.

இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் இந்திய மேலாளர் திருமதி மின்னி சாரா ஆபிரகாம், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மற்றும் அனைத்து ஹார்ட் ஃபார் இந்தியா அறக்கட்டளை ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும், நிவேதன் மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த திருமதி நட்சத்திர மேரி மற்றும் எனிசா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இவ்விழாவில், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், வட்டார கல்வி அதிகாரி சார்லஸ் பீட்டர், கல்வி சிறப்பு அதிகாரி மேடவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் திருமதி. கலைமணி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி சற்குணம் பிரகாஷ் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பேபி,  உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிராங்கோயிஸை கௌரவப்படுத்தினர்.

பின்னர் பேசிய பிராங்கோயிஸ், தனது குழு பள்ளிகளின் ஒத்துழைப்புடன் மேலும் முன்னேற விரும்புகிறது மற்றும் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்த மாணவர்களை அறிவுறித்தினார். மாணவிகள் தன்னபிக்கையுடன்   வளர்ந்திட வாழ்த்து கூறினார்.  மேலும், பள்ளிகளுக்கு ஆலோசகர்களை அனுப்பவும், கல்வியில் மாணவர்களின் நடத்தை மாற்றங்களை கண்காணிக்கவும் அவர் பரிந்துரைத்தார்.