நிசப்தம் – சினிமா விமர்சனம்

பெங்களூரில் வாழ்ந்துவரும் அஜய்-அபினயா தம்பதிக்கு 8 வயதில் சாதன்யா என்றொரு மகள். அஜய் ஒரு கார் கம்பெனியில்  மெக்கானிக்காகவும், அபினயா தனது வீட்டுக்கு கீழே கடையும் நடத்தி வருகிறார். வேலையை விட்டு வீட்டுக்கு வந்தாலும்  அஜய், எந்நேரமும் கிரிக்கெட் பார்ப்பதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அபினயாவும் கடையிலேயே முழு கவனமும்  செலுத்துவதால், சாதன்யா மீது அக்கறை இல்லாமலேயே இருக்கிறார்கள். இதனால் சாதன்யா, தான் தனிமையாக இருப்பதாக உணர்கிறாள். இந்த நிலையில் ஒருநாள் பள்ளிக்கு செல்லும்நிலையில் ஒரு  இளைஞர், மழை பெய்துகொண்டிருப்பதால் தன்னை தன் வீட்டில் விட்டுவிடும்படி சாதன்யாவிடம் உதவி கேட்கிறான்.  சாதன்யாவும் உதவுவதாக அவனுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.

ஆனால், அந்த இளைஞன், சிறுமி சாதன்யாவை மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். பின்னர்  இது போலீசுக்கு தெரிய வர, உதவி ஆணையர் கிஷோர், சாதன்யாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கிறார். பின்னர், அவளது  பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கிறார். இதன்பிறகு அந்த சிறுமிக்கு ஏற்பட்ட நிலை என்ன? அவளது பெற்றோர்கள் அந்த சிறுமியை எவ்வாறு பழைய நிலைமைக்கு  கொண்டுவந்தார்கள்? மீடியாக்கள் இந்த சம்பவத்தை எப்படி அணுகுகிறது? சட்டம் அந்த குற்றவாளிக்கு எந்தமாதிரியான தீர்ப்பை  வழங்கியது? இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான மருத்துவம் கொடுக்கவேண்டும் என்பன போன்ற  விஷயங்களை மிகவும் வலியுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘நிசப்தம்’. 

நாயகன் அஜய்க்கு, முதல் பாதியில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தமுடியாத அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளது.  ஆனால், தனது குழந்தை பாலியல் துன்பத்துக்கு ஆளான பிறகு, ஒரு தந்தையாக அக்குழந்தையை சகஜ நிலைக்கு கொண்டு வர  இவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. முதல்படத்திலேயே ஒரு குழந்தைக்கு அப்பாவாக  தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அபினயா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘குற்றம் 23’  படத்திற்கு பிறகு அடுத்தவாரத்திலேயே அவரது நடிப்பை  மெச்சும்படியான இன்னொரு படமும் வெளிவந்திருப்பது சிறப்பு. இந்த படத்தில் 8 வயது சிறுமியின் தாயாக வலம் வரும்,  அபினயாவின் உச்சரிப்புக்கும், டப்பிங்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தாலும், தனது திறமையான நடிப்பால்  அதையெல்லாம் மறக்கடிக்க வைத்திருக்கிறார். 

உதவி ஆணையராக வரும் கிஷோர், நேர்மையான அதிகாரியாக பளிச்சிடுகிறார். சிறுமி சாதன்யா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறாள் மேலும், படத்தின் நாயகியே இவள்தான் என்பதுபோல் இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதற்க்கேற்ப உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறாள்.  நாயகனுடைய நண்பராக வரும் பழனி மற்றும் அவருடைய  மனைவியாக வரும் ஹம்சா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  இயக்குனர் மைக்கேல் அருண் பெங்களூரில் நடந்த சில சம்பவங்களை பத்திரிகைகளில் படித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். 

பாலியல் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட செய்திகளை நாம் ஒரு சம்பவமாக படித்துவிட்டு சென்றுவிடுவோம். ஆனால்,  இயக்குனரோ, இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், இது நடக்காமல்  இருப்பதற்கு நாம் தான் நம்முடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை  வலியுறுத்தியும், அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபிறகு, அந்த சிறுமிக்கும், குடும்பத்துக்கும் ஏற்படும் கஷ்டங்களையும் இந்த  படத்தில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவினால் படம் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் மீதுள்ள  அக்கறை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. தற்போதைய சூழ்நிலையில், தனது முதல் படத்தையே மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்திருக்கிறார்.