‘டெடி’ படத்தின் பின்னணி, ஆர்யாவுடன் வரும் கிராபிக்ஸ் கதாபாத்திரம்: ‘டெடி’ ரகசியம் பகிரும் சக்தி செளந்தராஜன்
கிராமத்தில் இருக்கும் பாட்டிகள் தொடங்கி நகரத்திலிருக்கும் குழந்தைகள் வரை அனைவருக்குமே தெரிந்த வார்த்தைகளில் ஒன்றாக டெடி பியர் இருக்கும். ‘டெடி பியர்’ என்கிற வார்த்தை அனைவருக்குமே பரிச்சயமானது. அதே போல் ‘டெடி’ படமும் இப்போது எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதற்கான ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டு இருக்கும் வேளையில் தமிழ் திரையுலகில் எப்போதுமே புதுமை விரும்பியான ‘டெடி’ இயக்குநர் சக்தி செளந்தராஜனிடம் பேசிய போது
‘டெடி’ என்ற பெயருக்கான காரணம்..
டெடி பியர் பொம்மைக்கும் ஆர்யாவுக்கு கதையில் ஒரு பெரிய இணைப்பிருக்கிறது. அதனால், நிறையப் பெயர்கள் யோசித்தோம். இறுதியில் பரிச்சயமான வார்த்தையான ‘டெடி’ என்ற பெயரையே வைக்கலாம் என முடிவு பண்ணினேன். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்கான காரணம் விளங்கிவிடும் என நினைக்கிறேன். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெடி பியர்களை எப்படி கொஞ்சி மகிழ்வார்களோ, அதே போல் அடுத்தாண்டு இந்த ’டெடி’ படத்தையும் பார்த்து மகிழ்வார்கள். அப்படியொரு விருந்து வைக்கத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.தமிழ்த் திரையுலகில் முதல் வங்கிக் கொள்ளை, ஜோம்பி, விண்வெளி ஆகியவற்றை மையப்படுத்தி படம் எடுத்துள்ளீர்கள். அப்படி ‘டெடி’ படத்தில்?ஒரு வார்த்தையில் படத்தின் ஜானரைச் சொல்லிவிட முடியாது. படத்தின் நாயகனோடு ஒரு கம்யூட்டர் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் கூடவே இருக்கும். முழுமையாக அதை கிராபிக்ஸில் மட்டுமே பண்ண முடியும். அப்படிப்பட்ட ஒரு டெடி பியர் கேரக்டர். அதுவே புதுமையான விஷயம் என நினைக்கிறேன். படத்தின் 2-வது முக்கிய கேரக்டர் இது தான் என்று சொல்லலாம். முழுக்க தொழில்நுட்பத்தை வைத்தே செயற்கையாக உருவாக்கி, நடிக்க வைக்கிறோம், சண்டைப் போட வைக்கிறோம். அது தான் பார்வையாளர்களுக்கு புதுமையாக இருக்கும். ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நிறையப் பேர் நடிச்சிருக்காங்க.திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சாயிஷா ஜோடியை எப்படி படத்தில் இணைத்தீர்கள்?முதலில் பயந்தேன். கல்யாணத்துக்கு முன்பு ஒரு படம் சேர்ந்து பண்ணியிருந்தாங்க. ‘காப்பான்’ படத்தில் ஜோடியாக இல்லாவிட்டாலும், இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தடுத்து கேட்டால் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தில் தான் போய் கேட்டேன். சாயிஷாவின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானது. கதையைக் கேட்ட ஒரே வாரத்தில் தேதிகள் கொடுத்துவிட்டார்கள். கிழக்கு ஐரோப்பில் அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகூ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஷுட் பண்ணியிருக்கேன்.ஏன் அசர்பைஜான் நாட்டைத் தேர்வு செய்து ஷுட் செய்ய என்ன காரணம்? ரொம்பவே பழமையான நாடு. ஒரு காலத்தில் அது தான் ரஷ்யாவாக இருந்தது. ரஷ்யாவாக இருக்கும் போது, இந்தியப் படங்கள் மீது பயங்கர ஆர்வமாக இருந்துள்ளார்கள். சாயிஷா மேடம் திலீப் குமாருடைய பேத்தி. அதைத் தெரிந்துக் கொண்டவர்கள் ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வந்து, ’திலீப் குமார்’, ’திலீப் குமார்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கருப்பு – வெள்ளைக் காலத்து இந்திப் படங்களைப் பற்றிக் கேட்டால் அவ்வளவு விஷயம் சொல்கிறார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ப் படங்கள் சில இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, யூ-டியூப் பக்கத்தில் இருக்கிறது. அதை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டில் சேரி மாதிரியான பகுதியில் ஷுட் பண்ணினோம். அங்கு ஒரு பாட்டி, ஆர்யா சாரை இழுத்து இழுத்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் ஏன் இப்படி தொந்தரவு செய்கிறார் எனத் தடுக்கப் போனோம். உடனே ‘மதராசப்பட்டினம்’ டிவிடியை எடுத்து ஆர்யாவிடம் காட்டி ‘இது நீ தானே’ என்று காட்டிக் கொண்டிருந்தது. பொதுவாகவே இந்தியப் படங்கள் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள். அங்கு 15 நாட்கள் ஷுட் பண்ணியிருக்கோம்.கிராபிக்ஸ் பணிகள் எவ்வளவு நாட்கள் நடக்கப் போகிறது? எந்த நிறுவனம் செய்யவுள்ளார்கள்?4 மாதம் முழுமையாக அந்த வேலை மட்டுமே நடக்கப் போகிறது. ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை ஒருங்கிணைந்த அருண்ராஜ் தான் இந்தப் படத்துக்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவுள்ளார். நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் செய்யவுள்ளது. இப்போதே ஷுட்டிங் முடிச்சுட்டோம். ஆனால், மார்ச் மாதம் வரை கிராபிக்ஸ் வேலை மட்டும் நடக்கப் போகுது. அது ஏன் என்பதை எல்லாம் படமாக பார்க்கும் போது புரியும்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குறித்து…
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குறித்து…
‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு அப்புறம் ஞானவேல்ராஜா சாரை சந்தித்தேன். பட்ஜெட், எத்தனை நாள் ஷுட்டிங் என எதுவுமே கேட்காமல் படம் பண்ணலாம் என்று சொன்னார். படத்தின் பட்ஜெட் இது தான் என இப்போது வரை முடிவு பண்ணவே இல்லை. படத்துக்கு என்ன தேவையோ, கொடுத்துக்கிட்டே இருக்கார். ‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப் பிறகு ஆர்யா சாருக்கு ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கார். கண்டிப்பாக அவருடைய நிறுவனத்துக்கு நிறைய மைல்கல் படங்கள் இருக்கிறது. அதில் ‘டெடி’ இணையும் என்று சொல்வேன்.படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து..
’நாணயம்’ படத்தில் 2-வது யூனிட் கேமராமேனாக யுவராஜ் பணிபுரிந்திருந்தார். அப்போதிலிருந்தே பழக்கம். அவர் கேமராமேனாக பணிபுரிந்த ‘ஜாக்சன் துரை’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆகையால் இந்தப் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். உண்மையிலேயே காட்சிகள் எல்லாம் மிரட்டலாக வந்துள்ளது. இசையமைப்பாளராக இமான், சண்டை இயக்குநராக சக்தி சரவணன், எடிட்டராக சிவநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக ரொம்ப ஸ்ட்ராங்கான படம். ’குறும்பா’ என்ற பாடல் ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. அதே போல் ‘டெடி’ படத்திலும் இமான் இசை பேசப்படும்.